பெங்களூரூவின் நிம்ஹான்ஸ் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் உயிர் பறிபோனதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிக்கமகளூருவில் உள்ள பசவனகுடியைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் ஜோதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. வீட்டில் நான்கு அடி உயரத்தில் இருந்து குழந்தை விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
முதலில் குழந்தையை ஹாசன் மருத்துவ அறிவியல் கழகத்திற்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ்க்கு (தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்) அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.
விரைவாக குழந்தையை நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல க்ரீன் காரிடார் (Green Corridor) அமைக்கப்பட்டது. 224 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 40 நிமிடங்களில் கடந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர்.
குழந்தையின் அட்மிஷன் மற்றும் அவசரநிலை குறித்து 29-ம் தேதியன்று நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு தொலைபேசியில் தெரிவித்து இருந்தனர். ஆம்புலன்ஸ் விரைவாக அங்கு சென்று சேர்ந்த பின்னரும் 90 நிமிடங்களுக்கு மேல் படுக்கை இல்லை என நிம்ஹான்ஸ் மருத்துவ ஊழியர்கள் காத்திருக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பின் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் ஊழியர்களின் அலட்சியமே இதற்குக் காரணம் என நவம்பர் 30 அன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்டநேரம் வலியோடு குழந்தையை ஆம்புலன்ஸில் வைத்திருந்தது பொது மக்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
“நாங்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தோம். அவர்கள் ஒத்துழைத்திருந்தால் குழந்தையைக் காப்பாற்றியிருக்கலாம். பெங்களூருக்கு வருவது இதுவே முதல் முறை. குழந்தை காப்பாற்றப்படும், இங்கு கொண்டுவந்தால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் வந்தோம்.
எனக்குப் படுக்கைகள் பற்றி தெரியாது; வந்து ஏதோ ஊசி போட்டார்கள். எங்களிடம் பேசவும் இல்லை, நாங்கள் பேசச் சென்ற போதும் எதுவும் பேசவில்லை” என்றார் குழந்தையின் தந்தை வெங்கடேசன்.
இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோயாளி இதயத் துடிப்பு குறைந்து போகும் bradycardia-வால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். மாலை 3 மணிக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் குழந்தையை உயிர்ப்பிக்க முடியவில்லை.
குழந்தைக்குக் கடுமையான மூளைக் காயம் ஏற்பட்டது. மேலும் குணமடைதல் குறித்த முன்கணிப்பு மோசமாக இருப்பதால், குழந்தையை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்திற்கு (நிம்ஹான்ஸ்) மாற்ற வேண்டாம் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
நிம்ஹான்ஸின் ரெசிடென்ட் மெடிக்கல் ஆஃபீசர் டாக்டர் ஷஷிதர், சோதனைகளை நடத்துவதற்கு 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டார்.
“குழந்தை மிகவும் மோசமாக இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதைப் பெற்றோருக்குப் புரிய வைக்க நாங்கள் முயன்றதால் தாமதம் ஏற்பட்டது” என்று அவர் கூறியிருக்கிறார்.
“குழந்தையை நிம்ஹான்ஸுக்கு அழைத்து வந்தோம், ஏனென்றால் நாங்கள் அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்பட்டோம். குழந்தையை இங்கு கொண்டு வந்தவுடன் டாக்டர்கள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்க வேண்டும்.
ஆனால் டாக்டர்கள் ஆம்புலன்ஸ் வரை மட்டுமே வந்து குழந்தையைப் பார்த்து விட்டுச் சென்றனர். அவர்கள் எங்களிடம் கூட பேசவில்லை. அவர்கள் தங்களுக்குள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசிக்கொண்டு நோயாளி ஆம்புலன்சில் படுத்திருக்கும்போது உள்ளே சென்றார்கள்” என்று ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்த சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், “நிம்ஹான்ஸில் ஏற்பாடுகள் சரியாக இல்லை. அங்கு கூட்டம் அதிகமாக உள்ளது. அழுத்தம் அதிகம் இருந்தபோதிலும் தரமான சிகிச்சையை ஊழியர்கள் உறுதி செய்கிறார்கள். அவர்களின் அழுத்தத்தை நாம் குறைக்க வேண்டும். குழந்தையின் மரணம் குறித்த கூடுதல் தகவல்களை நான் சேகரிப்பேன்” என்று கூறினார்.