மணிலா,
விலங்குகள் நல ஆர்வலர்களால் “உலகின் சோகமான” (World’s ‘saddest’ elephant) யானை என பெயரிடப்பட்ட “மாலி” எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலி பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ள நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாகவே கழித்துள்ளதாம்.
‘மணிலா’ மிருகக்காட்சிசாலையில் நான்கு தசாப்தங்களாக இருந்து வரும் மாலியை மிகவும் நேசித்தவர்களிடமிருந்து அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலியின் மரணம் குறித்து மணிலாவின் மேயர் பேஸ்புக் காணொளியில் அறிவித்துள்ளார். மாலியைப் பார்க்க மிருகக் காட்சிசாலைக்குச் சென்றது தனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலி தனது தும்பிக்கையை சுவரில் தொடர்ந்து தேய்த்துக் கொண்டிருந்தது. வலியின் அறிகுறியாக இருப்பதாக மிருகக்காட்சிசாலையின் தலைமை கால்நடை மருத்துவர் ஹென்ரிச் பேட்ரிக் பெனா-டோமிங்கோ வெளிநாட்டு ஊடகங்கள் முன் தெரிவித்துள்ளார்.
எனினும் 28-ம் தேதி யானையின் நிலைமை மிகவும் மோசமடைந்ததுடன், அதிகமாக சுவாசிக்க சிரமமப்பட்டது. பின்னர் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், அன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தது என்றார்.
மேலும், பிரேத பரிசோதனையில் அந்த யானைக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமனியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலியின் முழுப் பெயர் விஷ்வ மாலி ஆகும். மாலி பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் இமெல்டா மார்கோஸுக்கு 1981ஆம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசால் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
மணிலா மிருகக்காட்சிசாலையில் 1977-ம் ஆண்டில் வந்த மற்றொரு யானை ஷிவா. 1990-ம் ஆண்டில் ஷிவா உயிரிழந்ததிலிருந்து மிருகக்காட்சிசாலையில் மாலி யானை மட்டுமே இருந்தது.
கொரோனா காலகட்டத்தில், மணிலா உயிரியல் பூங்கா குழந்தைகளுக்கான தடுப்பூசி மையமாக செயல்பட்டது. அங்கு மாலி அவர்களை மகிழ்விக்க தனது நேரத்தை செலவிட்டது குறிப்பிடத்தக்கது.