துபாய்,
உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை துபாய் புறப்பட்டார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், பிரதமர் மோடி உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் தனது உரையை ஆற்றுவார். மேலும் பிரதமர் மோடி 3 உயர்மட்ட நிகழ்வுகளில் பங்கேற்கிறார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட் வந்தடைந்தார் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “பிரதமர் நரேந்திர மோடி COP28 உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டிற்காக ஐக்கிய அரபு எமிரேட் வந்தடைந்தார். துணைப் பிரதமரும் ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சருமான ஷேக் சைப் பின் சயீத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்றார். கூடுதலாக WCAS இல் அவரது பங்கேற்பு, பிரதமர் உலகளாவிய தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவார் மற்றும் காலநிலை நடவடிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பார்” என்று அரிந்தம் பாக்சி பதிவிட்டுள்ளார்.