புதுச்சேரி: பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நூறடி சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கல்லூரி மாணவ – மாணவியருக்கிடையே மாநில அளவில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மேலும், எச்ஐவி பரிசோதனை மையங்களில் சிறந்த 5 நட்சத்திர தரச் சான்று பெற்ற மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம், கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம் மற்றும் காரைக்காலில் உள்ள மூன்று பரிசோதனை மையங்களை சார்ந்த ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியது: ”ஒரு சமயத்தில் எய்ட்ஸ் நோயைக் கண்டு எல்லோருக்கும் பெரிய அச்சம் இருந்தது. நாளடைவில் அந்த அச்சம் குறைந்து வருவதை பார்க்கலாம். இதற்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டு ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலில் அதிகமான எண்ணிக்கையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த எய்ட்ஸ் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து மருந்து வாங்கி சென்றனர். ஆனால், இப்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது வரவேற்கத்தக்கது. 2030-ல் எய்ட்ஸ் நோய் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும். புதுச்சேரியில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அவர்களுக்கு தேவையான உதவியையும் அரசு செய்து கொடுத்து வருகிறது.
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களுக்கு வர வேண்டும். இதன் மூலம் எய்ட்ஸ் மேலும் பரவாமல் இருக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் உள்ள நெறிமுறைகள் சரியாக இருந்தால் எய்ட்ஸ் பாதிப்பு குறைவாக இருக்கும். புதுச்சேரியில் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதியை அரசு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல், சளி, இருமல் வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே மருந்து கொடுக்க வேண்டும். தேவையான மருந்துகள் இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
நோய் வந்து அவதிபடுவதை விட நோய் வராமல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மிடத்தில் வர வேண்டும். சுகாதாரத்துறை மட்டும் போதாது. அனைத்து துறைகளும் நோய் வராமல் தடுக்க கவனம் செலுத்த வேண்டும். புதுச்சேரியில் சிறப்பு மருத்துவ வசதி அதிகம் கிடைக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். சுகாதாரத்துறை எல்லாவற்றிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நோய் விரைவாக குணமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான வசதியை அரசு செய்து கொண்டிருக்கிறது.
அதிக நிதியையும் ஒதுக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சிறந்த மருத்துவ வசதியை கொடுக்கின்ற மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும். எந்த குறையும் இல்லாமல் சுகாதாரத்துறை தொடர்ந்து முதலிடத்தில் இருக்க வேண்டும். அரசானது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. வருங்காலத்தில் இந்த உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும், பயணப்படியை உயர்த்தி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏ சம்பத், சுகாதாரத் துறை இயக்குநர் ஶ்ரீராமுலு, பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் சித்ராதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.