தமிழ்நாட்டில் அமைச்சர்கள், குவாரி நடத்துபவர்கள், தொழிலதிபர்கள் அலுவலகங்களில் சோதனை செய்து பரபரப்பு ஏற்டுத்தி வந்த அமலாக்கத்துறையினரின் அலுவலகத்தில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமலாக்கத்துறை அலுவலர் அங்கித் திவாரி என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் மதுரைக்கு பணியிட மாறுதலாகி வந்தார்.
டாக்டர் சுரேஷ்பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படவுள்ளது, இதிலிருந்து காப்பாற்றுவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு டாக்டர் சம்மதிக்காததால், கடைசியில் 51 லட்சம் ரூபாய் எனப் பேசி முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி, முதல் தவணையாக அமலாக்கத்துறை அலுவலர் அங்கித் திவாரியிடம் 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அடுத்த தவணையை நேற்று டாக்டரிடம் பணம் கேட்டிருக்கிறாராம் அமலாக்கத்துறை அதிகாரி. பணம் கொடுக்க விரும்பாத டாக்டர் சுரேஷ்பாபு, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் இது தொடர்பாகப் புகார் அளித்தார்.
அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி, இன்று திண்டுக்கல் வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம், 20 லட்சம் ரூபாயைக் கொடுத்தார் டாக்டர் சுரேஷ்பாபு. அதை தன்னுடைய காரில் வைத்துக்கொண்டு செல்ல முயன்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அங்கித் திவாரியைச் சுற்றி வளைத்தனர். ஆனால், அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார்.
பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து, அந்த காரை மடக்கிப் பிடித்து, அவரை திண்டுக்கல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கைதுசெய்தனர். மேலும், அவரிடமிருந்து 20 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரிக்க வருகை தந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகத்தில் உயரதிகாரி இல்லாததால், லஞ்ச ஒழிப்புத்துறையினரை சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை உதவி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால், அவர் பயன்படுத்திய அறைகளில் சோதனை நடத்தவிருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில், துப்பாக்கி ஏந்திய 20-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர்.
அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினரைச் சோதனை செய்ய விடாமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது. ஆலோசனைக்கு பின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் சென்று சோதனையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்டம் சி.ஜி.எம். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.