துபாய்: காலநிலை மாற்றம் தொடர்பான COP33 உச்சி மாநாட்டை 2028-ம் ஆண்டு நடத்த இந்தியா தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. Conference of the Parties(COP) என்பது 1992-ம் ஆண்டு ஐ.நா சபையில் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் உச்சி மாநாட்டை குறிப்பதாகும். துபாயில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா சபையின் 28-வது உச்சி மாநாடு COP28 என அழைக்கப்படுகிறது. நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் கலந்து கொள்கின்றன. புவி வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவது குறித்து ஆராய்வதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை 2028-ம் ஆண்டு நடத்த இந்தியா முன்வந்துள்ளது. துபாயில் நடைபெற்று வரும் COP28 உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, ”காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதன் காரணமாகவே, இந்த மேடையில் நான் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். COP33 உச்சி மாநாட்டை 2028-ம் ஆண்டு நடத்த இந்தியா தயாராக இருக்கிறது.
உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தை இந்தியா கொண்டிருக்கிறது. எனினும், உலகம் வெளியிடும் கரியமில வாயுவில் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே இந்தியா வெளியிடுகிறது. கரியமில வாயுவை கட்டுப்படுத்துவதில் உறுதி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி பயன்பாடு உள்ளிட்ட திட்டங்களின் மூலம் அன்னை பூமியை பாதுகாக்கும் முயற்சியில் முன்னணியில் இருக்கும் நாடாக இந்தியா உள்ளது.
கரியமில வாயு உமிழ்வை 2030-ம் ஆண்டுக்குள் 45% குறைப்பதே இந்தியாவின் குறிக்கோள். 2070-ம் ஆண்டுக்குள் இதை பூஜ்ஜியமாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். புதைபடிவமற்ற எரிபொருளின் பங்கை 50% ஆக உயர்த்த இந்தியா முடிவு செய்துள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அலிடிஹாட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “காலநிலை மீதான உலகின் லட்சியங்கள் அதிகரித்துள்ளன. அதற்கு பொருந்தக்கூடிய வகையில் நிதி ஒதுக்கீட்டில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், தற்போதைய சந்திப்பு பயனுள்ளதாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கும்” என்று பிரதமர் மோடி கூறினார்.