கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், திப்பிராஜபுரம் மற்றும் பம்பப்படையூரில் ரூ. 39.04 லட்சம் மதிப்பிலான பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். எம்பிக்கள் எஸ்.கல்யாணசுந்தரம், செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், துரை.சந்திரசேகரன், துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் பங்கேற்று, திப்பிராஜபுரம் மற்றும் பம்பப்படையூர் ஆகிய 2 ஊராட்சிகளில் தலா ரூ.19.52 லட்சம் மதிப்பில் கட்டப்படும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்து, 39 பயனாளிகளுக்கு ரூ. 39 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பின்னர், தாராசுரம் மார்கெட் எதிரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தைத் திறந்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம், பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் கூறியது.
பாபநாசம் வட்டம், உமையாள்புரம் மற்றும் கும்பகோணத்திலுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் அரசு அறிவித்து வரும் நலத்திட்டங்கள் சென்று அடைகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2 மாதங்களில் கால்நடை பராமரிப்புக்கு என சுமார் ரூ. 200 கோடி கடன்களாக வழங்கியுள்ளோம். சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் கடனுக்கான விண்ணப்ப மனு பெறப்பட்டுள்ளது, அதனை விரைவில் அனைவருக்கும் வழங்குவோம்.
ஆவினில் எந்தப் பொருட்களை நிறுத்தவில்லை, இதற்குப் பதிலாகப் பசும்பாலின் தரத்தில், புதியதாக மற்றொரு பாலை வழங்கவுள்ளோம்.
பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற கூட்டுறவு சங்கங்களைத் தமிழகத்தில் உருவாக்குவது என புதிய இலக்கினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே, தமிழகத்தில் விரைவில் வெண்மைப் புரட்சி ஏற்படும்.
தற்போது புதியதாக விற்பனை நிலையங்களை தொடங்கவுள்ளோம். அதில் படித்த இளைஞர்கள், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் ஆகியோர் புதியதாக ஆவின் விற்பனை மையம் திறப்பதற்கு, தொடர்புடைய அதிகாரிகள் அனுகினால், அவர்களுக்கான தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரவுள்ளோம்.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னைக்கு 70 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனை நடந்துள்ளது. இன்னும் கூடுதலாக விற்பனை ஆனாலும், அதனை சமாளிப்பதற்கு, உற்பத்தி, கொள்முதல், விற்பனை ஆகியவற்றை பெருக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தமிழகத்தில் விரைவில் குறைந்த பட்சம் சுமார் 2 லட்சம் விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்குவதற்கு கடன் வழங்கவுள்ளோம். இதுவரை சுமார் 40 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கு அந்தக் கடன் வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
கும்பகோணம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஒரு சில இடங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர், கும்பகோணம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 2 அலுவலர்களை சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டுள்ளீர்கள், எனக் கேட்டதற்கு, ஆமாம் பண்ணியிருக்கு என அமைச்சர் பதில் தெரிவித்தார்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பு.உஷா, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன், தஞ்சாவூர் ஆவின் பொதுமேலாளர் எஸ்.சத்யா, தஞ்சாவூர் துணைப்பதிவாளர் பால்வளம் எஸ்.கே.விஜயலட்சுமி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாகத் தஞ்சாவூர் துணைப்பதிவாளர் பால்வளம் எஸ்.கே.விஜயலட்சுமி கூறியது,
கும்பகோணம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலுள்ள குளிரூட்டும் பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாமல், குறைகள் இருந்தது. அதனை சரி செய்ய வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார். ஆனால் 2 அலுவலர்கள் சஸ்பென்ட் செய்தது பற்றி எந்த உத்தரவும் வரவில்லை எனத் தெரிவித்தார்.