ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் தீர்மானிக்கும் என்று துணை முதல்வர் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தவர் சிங் தியோ. எனினும், பூபேஷ் பெகல் முதல்வராக தேர்வானார். பூபேஷ் பெகல் இரண்டரை ஆண்டுகளும், சிங் தியோ இரண்டரை ஆண்டுகளும் முதல்வராக பதவி வகிப்பார்கள் என எடுக்கப்பட்ட முடிவு பின்னர் மாற்றப்பட்டது. முழு 5 ஆண்டுகளும், பூபேஷ் பெகல் முதல்வராக இருந்தார்.
தற்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், சத்தீஸ்கரின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த சிங் தியோ, ”கடந்த ஐந்தாண்டுகளில், இரண்டரை ஆண்டுகள் தொடர்பான எங்கள் அனுபவம் நன்றாக இல்லை. கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதுவே இறுதியானது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். ஊகங்களை நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில் அது உறவுகளிலும் அழுத்தத்தை உருவாக்குகிறது. எனவே, இதனை மேலிடத்தின் முடிவுக்கு விட்டு விட முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கடும் போட்டி கொடுத்திருப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சிங் தியோ, ”காங்கிரஸ் மீது மக்களுக்குத் திருப்தி உள்ளது. 60 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன். முதல்வராக யார் வர வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். கட்சி மேலிடத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
பூபேஷ் பெகல் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக சிங் தியோ பதவி வகித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவர், துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். பூபேஷ் பெகலுக்கும் சிங் தியோவுக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வந்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: இண்டியா டிவி-சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், சத்தீஸ்கரில் பாஜக 30-40 இடங்களிலும், காங்கிரஸ் 46-56 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரிகிறது. ஜன் கி பாத் கருத்துக்கணிப்பின்படி பாஜக 34-45 இடங்களிலும், காங்கிரஸ் 42-53 இடங்களிலும் வெற்றி பெறும். நியூஸ் 24-டுடேஸ் சாணக்கியா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 33 இடங்களிலும், காங்கிரஸ் 57 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி – மேட்ரிஸ் கருத்துக் கணிப்பில் பாஜக 34-42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44-52 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிசோரமில் இழுபறி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.