சென்னை: சென்னையில் மருந்தகம், மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள், நோயாளிகள் அவதியடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. பல இடங்களில், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிஅடைந்தனர். அதேபோல், பல இடங்களில் மழை நீர் மருத்துவமனை வளாகத்திலும் தேங்கிய தால் நோயாளிகளும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
அந்தவகையில், சென்னை கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சொந்தமான மருந்தக வளாகத்தில் நேற்று மழை நீர் குளம் போல் தேங்கியது. கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளி களுக்கு இங்கு மருந்துகள் வழங் கப்பட்டு வருகிறது.
மருந்துகள் சேதம்: சாலையில் இருந்து மிக தாழ்வான பகுதியில் இந்த மருந்தகம் அமைந்திருப்பதால், அங்கு நேற்று முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி இருந்தது. மருந்தக கட்டிடத்துக்குள்ளும் மழை நீர் சென்ற தால், மருந்து வாங்குவதற்கும், இதர பணிகளுக்காகவும் வந்த பொதுமக்கள், முழங்கால் அளவு தண்ணீரில் சிரமப்பட்டு நடந்து சென்றனர்.
மேலும், மருந்துகள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால், கீழே வைக்கப்பட்டிருந்த மருந்து பெட்டிகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி வீணாகியது. மேலும், மருத்துவ அதிகாரி அறைகள் உட்பட தரை தளத்தில் உள்ள அனைத்து அறைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மருந்து பெட்டிகளை வேறொரு இடத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்ப் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னை கே.கே.நகர் புறநகர் மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் புகுந்தது.
இதனால், மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் குளம் போல காட்சி அளித்தது. அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளும், புறநோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிவளாகத்தில் மழைநீர் தேங்கி யிருந்தது. அதனை, மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்ப்மூலம் வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதேபோன்று, சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனை வளாகங்களில் மழைநீர் தேங்கியதால் நோயாளி கள், பணியாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.