சென்னை சர்வதேச திரைப்பட விழா 14ம் தேதி தொடங்குகிறது : 12 தமிழ் படங்கள் விருதுக்காக மோதல்

இன்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழாவை சென்னையில் நடத்தி வருகிறது. அந்த வரிசையில் 21வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்படுகின்றன.

இதில் பல விருதுகளை வென்ற வெளிநாட்டு படங்களான தி டீச்சர்ஸ் லவுஞ்ச், பேர்ப்பக்ட் டேஸ், டூ நாட் எஸ்பெக்ட் டூ மச் பிரம் தி எண்டு ஆப் தி வேல்ட், பாலன் லீப்ஸ், ஸ்வீட் டீர்ம்ஸ், மெலடி உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக ஆஸ்கர், கேன்ஸ், பெர்லின் திரைப்பட விருது விழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களும் திரையிடப்படுகின்றன. 19 இந்திய மொழி படங்கள் திரையிடப்பட உள்ளன.

தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவுக்கு, ‛‛அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன. மாமன்னன், போர் தொழில், ராவணக் கோட்டம், சாயாவனம், ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், செம்பி, உடன்பால், விடுதலை 1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3'' ஆகிய 12 படங்கள் தேர்வாகி உள்ளன. இதில் இருந்து 2 சிறந்த படங்களும், இயக்குனர், நடிகர், நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். தேர்வு குழு தலைவர்களாக இயக்குனர் மோகன்ராஜாவும், யூகி சேதுவும் பணியாற்றுகிறார்கள்.

திரைப்பட விழாவின் படங்கள் பி.வி.ஆர், ஐநாக்ஸ் சினிமாஸ், சத்யம் சினிமாஸ், சாந்தம், சீசன், சிக்ஸ் டிகிரி, சேரின் ஸ்க்ரீன்ஸ், அண்ணா சினிமாஸ் ஆகிய தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன. இதன் தொடக்க விழா 14ம்தேதி மாலை 6 மணிக்கு சத்யம் தியேட்டரில் நடக்கிறது. தொடக்க நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான கேன்ஸ் விருது வென்ற 'அனாடமி ஆப் எ பால்' படம் திரையிடப்படுகிறது. நிகழ்ச்சின் நிறைவு விழாவும் சத்யம் தியேட்டரில் நடக்கிறது.

இன்டோ சினி அப்ரிசியேஷன் அமைப்பின் நிர்வாகிகள், நடுவர் குழுவினர் இதனை நேற்று அறிவித்தார்கள். இந்த விழாவுக்கு தமிழக அரசு ஒரு கோடி நிதி ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.