சென்னை,
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமாா் 780 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரம்) தென்கிழக்கே சுமாா் 940 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
இதைத் தொடா்ந்து, டிச. 5-ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூா்- மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிச. 6-ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும். இந்த நிலையில் நாளை கடலூா், மயிலாடுதுறை, நாகை , திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.