பிரதமர் அலுவலகம் உட்பட 21 செலவுத் தலைப்புகளுக்கான 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்ட பிரதமர், தனது அலுவலகத்தின் செலவு முகாமைத்துவம் குறித்த விபரங்களை ஹன்சார்ட் அறிக்கைக்கு சமர்ப்பித்தார்.
அதன்படி, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் 21% வீதத்தினாலும், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமாகும் போது 46% வீதத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் 1661.7 மில்லியன் ரூபாவாக இருந்த செலவுகள், 2022ஆம் ஆண்டில் 1310.4 மில்லியனாகவும், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமாகும் போது ரூ. 705.7 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், 2021-ம் ஆண்டு பிரதமர் அலுவலகத்திற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 1661.7 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டிருந்ததுடன், 2022இல் ஒதுக்கப்பட்ட 1432.8 மில்லியன் ரூபாவில் 1310.4 மில்லியன் ரூபா மட்டுமே செலவு செய்யப்பட்டிருந்தமையும் 2023இல் ஒதுக்கப்பட்ட 1012.0 மில்லியன் ரூபாவில் 705.7 மட்டுமே செலவிடப்பட்டிருந்தமையாகும்.
தினேஷ் குணவர்தன அவர்கள் பிரதமர் பதவியை ஏற்கும் முன்னர், 2021-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதமர் அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை 500க்கும் மேற்பட்டதாக இருந்ததுடன், தற்போது அந்த எண்ணிக்கை 285 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2022ல் சம்பளச் செலவுகள் ரூ. 340.3 ஆக இருந்ததுடன், 2023.11.22 ஆந் திகதியாகும் போது, அந்த செலவு 208.2 மில்லியன் ரூபாவாக 39% குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இலத்திரனியல் முறைமைகள் மூலம் அலுவலக பணிகளை மேற்கொள்வதன் மூலம் காகிதாதிகளின் செலவு 74% குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெறும் கடிதங்களுக்கு பதில் அனுப்பும் முறையை டிஜிட்டல் மயமாக்கியதால், தபால் மற்றும் தொடர்பாடல் செலவுகளை 36% குறைக்க முடிந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், பிரதமர் அலுவலகத்தில் 178 வாகனங்கள் இருந்தபோதும், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், சேவைத் தேவைகளுக்குப் போதுமான 125 வாகனங்கள் மட்டுமே உள்ளன. அதன்படி, 2022 ஆண்டு 239.2 மில்லியன் ரூபாவாக இருந்த வாகன பராமரிப்பு செலவு 2023ல் 70% குறைக்கப்பட்டு ரூ.72.3 மில்லியனாக உள்ளது.
எரிபொருளின் செலவு 26% குறைந்துள்ளமையானது, 2022 ஆம் ஆண்டில் 107 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில் இருந்து 2023இல் 79.3 மில்லியன் ரூபாவாக குறைக்க முடிந்தமையினாலாகும்.
இலங்கை மின்சார சபையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த மின் பிரப்பாக்கிகளின் வருடாந்த பராமரிப்பு நடவடிக்கையை முகவர் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததன் மூலம் பிரதமர் அலுவலகம் 15 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தியதுடன், இயந்திரங்கள் மற்றும் இயந்திரங்களின் பராமரிப்புச் செலவு 31% குறைக்கப்பட்டது.
இவ்வாறு வினைத்திறனாக நிதி முகாமைத்துவத்தைப் பேணுகின்ற அதே வேளையில், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, மேலும் பல அவசர சந்தர்ப்பங்களை உள்ளடக்கிய வகையில் பிரதமர் அலுவலகத்தின் பொறுப்புகளின் நோக்கெல்லை மேலும் விரிவுபடுத்தப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். பிரதமர் அலுவலகத்திற்கு அமைச்சரவையினால் ஒதுக்கப்பட்டுள்ள மேலதிக பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும், அலுவலகத்தின் சேவைகளை தடையின்றி பேணுவதற்கும், செலவுகளை மட்டுப்படுத்தியமை ஒரு தடையாக அமையவில்லை.
262 பாரிய அளவிலான திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய செயற்பாட்டு மையத்தினை வாராந்தம் நடைமுறைப்படுத்தியமை, தேசிய நீர்வளக் கொள்கையைத் தயாரித்தல், தேசிய டிஜிட்டல் கொள்கையைத் தயாரித்தல், தேசிய சக்திவள கொள்கையை தயாரித்தல், மற்றும் கல்வி மூலோபாயங்கள் மற்றும் கொள்கை சட்டகத்தைத் தயாரித்தல் ஆகிய மேலதிக பணிகளும் பிரதமர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பிரதமர் ஊடகப் பிரிவு