டேராடூன்: 490 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சில்க்யாரா சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அந்தத் தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிறுவயது விளையாட்டுகளை விளையாடி நேரத்தைக் கழித்ததாக மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப் பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 28-ம் தேதி அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 490 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு சில்க்யாரா சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் ராணுவத்துக்குச் சொந்தமான சினூக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து தொழிலாளர்களும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ள மோதிபூரில் வசிக்கும் அன்கித் என்பவர் சுரங்கப் பாதைக்குள் சிக்கியிருந்தபோது எவ்வாறு 17 நாட்களை கழித்தனர் என்பதைப் பற்றி தெரிவித்தார். அப்போது தனியார் ஊடகத்திடம் பேசிய அவர், ”எனது குடும்பத்தினருடன் பேச முடியாமல் தவித்தேன், அவர்கள் நலமாக இருக்கிறார்களா இல்லையா என்பதை நினைத்துக் கொண்டே இருந்தேன். சுரங்கப் பாதை நீளமாக இருந்ததால், நேரத்தை கடத்த அங்கும் இங்குமாய் நடந்து சென்றோம்.
நாங்கள் ராஜா, மந்திரி போன்ற சிறுவயது விளையாட்டுக்களை விளையாடி நேரத்தை கடத்தினோம். டைரி, பேனாவைப் பயன்படுத்தி விளையாடும் கார்டு கேமையும் (Card Game) விளையாடினோம். சுரங்கப் பாதைக்குள் அதிக அளவிலான குளிர் இல்லை. உள்கட்டமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் துணிகளின் மீதுதான் படுத்து உறங்கினோம். அவற்றையே போர்வைகளாகவும் பயன்படுத்திக் கொண்டோம். இவை அனைத்தும் மரணத்துக்கு அருகில் இருந்த அனுபவம்” எனத் தெரிவித்துள்ளார்.