அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 4-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மிசோரமிலும் 3-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 70 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அந்த மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.
மிசோரம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. தேவாலயங்களும் இந்த கோரிக்கையை வைத்துள்ளன. அதையடுத்து 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.