காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான ஒரு வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த சிறிது நேரத்திலேயே போர் தொடங்கிய நிலையில், காசாவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக காசாவில் இருந்தனர். இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 15,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வந்த போர், கடந்த மாதம் 24-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தொடர் முயற்சி காரணமாக ஒரு வார காலத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இந்த ஒரு வார காலத்தில், இஸ்ரேல் தரப்பில் இருந்து கைதிகள் சிலர் விடுவிக்கப்பட, பதிலுக்கு ஹமாஸ் தன்னிடம் இருந்த பிணையக் கைதிகளில் சிலரை விடுவித்தது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான இந்த போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று போர் மீண்டும் தொடங்கியது. காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டை இடைமறித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறிய சிறிது நேரத்திலேயே போர் மீண்டும் தொடங்கியது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல் கித்ரா இதனைத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.