மாஸ்கோ: தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களை தடை செய்து ரஷ்ய நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தன்பாலின உறவை ஆதரிக்கும் செயற்பாட்டாளர்களும் தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அநாட்டில் தன்பாலின உறவாளர்களின் பிரதிநிதிகள் கைது செய்யப்படவும், வழக்குக்கு உள்ளாவாகவுமான நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக மாற்றுப் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவு தொடர்பாக விமர்சனங்கள் வலுத்து வரும் சூழலில், ரஷ்ய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பாரம்பரியத்தில் இல்லாத பாலியல் உறவுகளை தடை செய்து, அவற்றை சட்டவிரோதமாக அறிவிப்பதோடு பாலினத்தை மாற்றும் அறுவை சிகிச்சைகளையும் சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு ரஷ்ய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது.
2024 மார்ச் தொடங்கி அடுத்த 6 ஆண்டுகளுக்கும் ரஷ்ய அதிபராகஇருப்பது தொடர்பான கோரிக்கையை விளாடிமிர் புதின் மக்கள் முன்னிலையில் விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், நீண்ட காலமாகவே ரஷ்ய கலாச்சாரத்தைப் பேணும் வகையில் தன்பாலின உறவை தடை செய்வது குறித்துப் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசிய புதின், “மேற்குலக விசித்திரமானவற்றை வரவேற்று ஏற்கும். ஆனால், என்னைப் பொருத்தவரை அவர்கள் ஏற்றுக் கொண்ட பல பாலினங்களையும், தன்பாலின உறவாளர்கள் பேரணிகளையும் பிற நாடுகள் மீது திணிக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். இவையெல்லாம் தற்போது சுட்டிக்காட்டப்பட்டு புதினின் அழுத்தம் காரணமாகவே சட்ட அமைச்சகம் பரிந்துரையை அளித்ததாக விமர்சனங்கள் வெளியாகின்றன.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் ”க்ரெம்ளின் மாளிகைக்கும் (ரஷ்ய அதிபர் மாளிகை) உச்ச நீதிமன்ற வழக்குக்கும், உத்தரவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை 2 மணி நேரம் நடந்துள்ளது. ஊடகங்களுக்கு இந்த தீர்ப்பை நேரலை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் பத்திரிகையாளர்கள் நீதிமன்ற நடவடிக்கையை கேட்டுக் கொள்ள மட்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய எல்ஜிபிடி சமூக செயற்பாட்டாளர் அலெக்ஸி செர்கெய்வ், ”இந்த உத்தரவு ஓர் எச்சரிக்கை மணி. இப்படியான அச்சுறுத்தல் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றார். மேலும், ”இந்தத் தடையால் எல்ஜிபிடி சமூகத்தின் மிகமோசமான நிலைக்குத் தள்ளப்படுவர். உளவியல் சிக்கல் ஏற்படும். அவர்கள் தற்கொலைக்கு நிர்பந்திக்கப்படுவார்கள். அவர்கள் மதுவுக்கும், புகைக்கும் அடிமையாவார்கள். யதார்த்தத்தில் இருந்து தப்பிக்க ஏதேதோ செய்து அழிவார்கள்” என்று கவலை தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவால் ரஷ்யாவில் தன்பாலின உறவாளர்கள் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
ஐ.நா. கண்டனம்: ரஷ்ய நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கண்டித்துள்ளார். ”இந்த உத்தரவை ரஷ்யா திரும்பிப் பெற வேண்டும். ஏற்கெனவே ரஷ்யாவில் எல்ஜிபிடி சமூகத்தினர் நிலைமை மோசமாக இருந்தது. தற்போது அது மிகவும் மோசமடைந்துவிட்டது” என்று அவர் கூறியுள்ளார். கடந்த 1993 ஆம் ஆண்டு ரஷ்யா தன்பாலின உறவை கிரிமினல் குற்றமாக்கியது. 1999-ல் இதை மனநல பாதிப்பு என்று பட்டியலிட்டது. பின்னர் 2013 முதல் குழந்தைகள் மத்தியில் பாரம்பரியத்தில் இல்லாத பாலியல் உறவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திப் பிரச்சாரம் செய்தாலே கிரிமினல் குற்றம் என்றது.