ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகின.
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிர்ரூரு, முலுகு, அஷ்வராவ் பேட்டா, பத்ராசலம், சென்னூரு, பெல்லம்பல்லி, மஞ்சிராலா, அசிஃபாபாத் உட்பட 13 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 600 வாக்குச் சாவடிகளில் போலீஸ், ராணுவப் படை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த பகுதிகளில், நேற்று மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
மொத்தம் 2,290 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 221 பேர் பெண்கள், ஒருவர் 3-ம் பாலினத்தை சேர்ந்தவர். மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 1.62கோடி பேரும், பெண்கள் 1.63 கோடி பேரும், 3-ம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 2,676 பேரும் உள்ளனர். இம்முறை புதிதாக வாக்களிப்பவர்கள், அதாவது, 18-19 வயதினர் மட்டும் 9.99 லட்சம் பேர்.
மொத்தம் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பதற்றமானதாக கண்டறியப்பட்ட 4 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார், ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 75 ஆயிரம் போலீஸாரும், 375 கம்பெனி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிராமங்களைவிட மிக மந்தமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
‘தயவு செய்து வாக்களிக்க வாங்க’: ஹைதராபாத் நகரில் பல வாக்குச் சாவடிகள் மதியம் 12 மணிக்கு பிறகுவாக்காளர்களே இல்லாமல் வெறிச்சோடின. இதை பார்வையிட்ட மாநிலதலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ், ‘‘நகர்ப்புற வாக்காளர்கள், தேர்தல் தினத்தை விடுமுறை நாளாக எடுத்துக்கொள்ளாமல், ஜனநாயக கடமையாற்ற வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்’’ என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். வாக்களிக்க வந்த பல சினிமா பிரமுகர்களும் மக்களிடம் இதே கோரிக்கையை முன்வைத்தனர்.
80 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது. அதாவது, அவர்கள் விருப்பம் தெரிவித்தால், அல்லது விண்ணப்பித்தால் அவர்களது வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் அவர்களின் வாக்குகளை பதிவு செய்வார்கள். தெலங்கானாவில் முதல்முறையாக அமல்படுத்தப்பட்ட இந்ததிட்டத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
முதியோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பதற்றமான 4 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு வீடியோ எடுக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன.
முதல்வர் சந்திரசேகர ராவ் தனது மனைவி ஷோபாவுடன் சித்திபேட்டை மாவட்டம், சிந்தமடகா கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ரேணுகா சவுத்ரி, ரேவந்த் ரெட்டி, உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.
சினிமா நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், நானி, ரவிதேஜா, விஜய் தேவரகொண்டா, கோபிசந்த், நாகர்ஜுனா, அமலா, இயக்குநர்கள் ராஜமவுலி, சுகுமார், ராகவேந்திரா, விளையாட்டு துறையை சேர்ந்த அசாருதீன், பி.வி. சிந்து உள்ளிட்ட பலரும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
ஹைதராபாத் கச்சிபவுலி பகுதியை சேர்ந்த சேஷய்யா (75), கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர், ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியோடு வந்து வாக்களித்தார்.
ஆதிலாபாத் எதுலபுரம் பகுதியில் கங்கம்மாள் (78) என்பவரும், புக்தபூர்னா கிராமத்தில் ராஜண்ணா (65) என்பவரும் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
வாக்கு எண்ணிக்கை வரும் 3-ம் தேதி நடைபெற உள்ளது.