வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கழிவறை கூட செல்ல முடியாமல் பல மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 20 வயதான இந்திய மாணவர் ஒருவரை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக அந்த மாணவரின் உறவினர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் (அவரின் விபரம் வெளியிடப்படவில்லை) கடந்தாண்டு அமெரிக்காவின் மிசோவுரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையில் படிக்க வந்துள்ளார். அந்த மாணவரை, கடந்த ஏப்ரல் மாதம், அவரது உறவினரான வெங்கடேஷ் கட்டாரு(35) என்ற ஐடி ஊழியர், தனது வீட்டிற்கு அழைத்து வந்து, தனது சொந்த பணிகளை செய்ய நிர்பந்தம் செய்துள்ளார். இதற்காக மாணவரை, பைப், கம்பியினால் கடுமையாக தாக்கி, சித்ரவதை செய்ததுடன், கழிவறை செல்லவும் அனுமதிக்கவில்லை. மேலும், தனது நண்பர்களான சரவண் வர்மா(23) மற்றும் நிகில் வர்மா(27) ஆகியோரையும் அழைத்து வந்து மாணவரை தாக்கும்படி கூறியுள்ளார்.
இந்திய மாணவரின் நிலையை அறிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார், அங்கு வந்து இந்திய மாணவரை மீட்டனர். தற்போது அந்த மாணவர், உடலில் பல காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் கட்டாரு, சரவண் வர்மா மற்றும் நிகில் வர்மா ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது ஆட்கடத்தல், தாக்குதல், மனித கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement