மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் கால்நூற்றாண்டாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரூ.190 கோடியில் அமையும் மேம்பாலம் கட்டுமானப்பணி தொடங்கியது. 61 தூண்கள் மற்றும் 62 கண்களுடன் மொத்தம் 2 கி.மீ நீளத்திற்கு இந்த மேம்பாலம் அமைகிறது.
மதுரை மாநகரை வைகை ஆறு வட மதுரை, தென் மதுரை ஆகிய இரு நகரப்பகுதிகளாக பிரிக்கிறது. மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி அம்மன் கோவில் ரயில்வே நிலையம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. வைகை ஆற்றின் வடபுறம் ராஜாஜி மருத்துமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , மாட்டுத் தாவணி, எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், மதுரை மாநகராட்சி அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியன அமைந்துள்ளன.