70 வயதில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பெண்… “குழந்தை இல்லாததால் கேலிக்கு உள்ளானேன்" என உருக்கம்

உகாண்டாவை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

சஃபினா நமுக்வயா (Safina Namukwaya) என்ற பெண்ணுக்கு 70 வயதாகிறது. இவருக்கு உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் IVF சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கருத்தரிப்பு மையத்தில் சிசேரியன் மூலம் ஓர் ஆண் மற்றும் பெண் குழந்தையை புதன்கிழமையன்று பெற்றெடுத்தார். இவருக்கு 2020-ல் பெண் குழந்தை பிறந்தது. இது இவரின் இரண்டாவது பிரசவம்.  

செயற்கை கருவுறுதல்

பொதுவாகப் பெண்களுக்கு 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நின்றுவிடும். இந்த நேரத்தில் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் குறைகிறது; ஆனால் மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் வயதான காலத்திலும் குழந்தை பிறப்பதைச் சாத்தியமாக்கியுள்ளது.

அந்த வகையில் செயற்கைமுறை கருத்தரித்தல் (IVF) முறையில் ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டை எடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் விந்தணுவுடன் சேர்த்துக்  கருத்தரிக்கப்படுகிறது. கருவுற்ற முட்டை பின்னர் பெண்ணின் வயிற்றில் வைக்கப்பட்டு வளர்ச்சியடைகிறது.

மேற்குறிப்பிட்ட உகாண்டா பெண், சிறுவயதில் சேமித்து உறையவைக்கப்பட்ட தனது கரு முட்டையைப் பயன்படுத்தியிருக்கிறாரா அல்லது கருமுட்டை தானம் மூலம் முட்டையைப் பயன்படுத்தி இருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

70 வயதில் பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற சம்பவம் பலரிடையே கவனம் பெற்று வருகிறது.

தன் உணர்ச்சிகளைப் பகிர்ந்துள்ள சஃபினா, “குழந்தை இல்லாததால் கேலிக்கு உள்ளானதைத் தொடர்ந்து நான் குழந்தைகளைப் பெற விரும்பினேன். நான் பிறரின் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டேன், அவர்கள் வளர்ந்து என்னைத் தனியாக விட்டு விடுவதைப் பார்த்தேன். நான் வயதாகும்போது என்னை யார் கவனித்துக்கொள்வார்கள் என்று யோசித்தேன்.

எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கப் போவதை அறிந்தவுடன் என் பார்ட்னர் என்னைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். இதனால் எனது கர்ப்ப காலம் கடினமானதாக இருந்தது.

Child Birth

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச் சுமக்கிறீர்கள் என்று கூறுவது ஆண்களுக்குப் பிடிக்காது. நான் இங்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அவர் ஒருபோதும் இங்கு வரவில்லை” என்று கூறியுள்ளார். 

“ஆப்பிரிக்காவின் 70 வயதான தாய்க்கு இரட்டைக் குழந்தைகளைப் பிரசவிப்பதில் நாங்கள் அசாதாரண சாதனையை அடைந்துள்ளோம். தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்” என மருத்துவ மையம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதேபோல 2019-ம் ஆண்டில், 73 வயதான இந்தியப் பெண் IVF சிகிச்சையைத் தொடர்ந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.