‘அந்தக் காலத்துல நாங்கெல்லாம்…’ என்ற வார்த்தை அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா….இவர்களிடமிருந்து வந்து விழாமல் இருக்கவே இருக்காது. அப்படி ‘அந்தக் காலத்துல’ என்ன தான் இருக்குக்னு நம்ம மைண்ட் வாய்ஸ் கூட குட்டி டைம் டிராவல் செய்யலாம், வாங்க…
‘நாம ஒரே ஒரு நாள் கிளாஸை பங்க் அடிச்சுட்டு, ஃபிரெண்ட்ஸ் கூட தியேட்டருக்கு போயிட்டோம்’னு அப்பாவுக்குத் தெரிந்துவிட்டால் போதும்…’நாங்கலாம் அந்தக் காலத்துல அப்பாவ பாத்தாலே நடுங்குவோம். அவர் என்ன சொன்னாலும் ‘சரி’-ங்கற வார்த்தையத் தவிர வேற வார்த்தையே பேசமாட்டோம். ஆனா உங்களுக்கு எங்க மேல பயமே இல்ல. அப்பாவுக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சுடுவார்னு பயத்துலேயே எந்தத் தப்பும் செய்யமாட்டோம்’ என்று மூச்சுமுட்ட டயலாக் பேசும் அப்பாக்கள், டிவியில் தங்கப்பதக்கம் படம் பார்க்கும்போதும், நாடோடி மன்னன் பார்க்கும்போதும்…
‘இப்போலாம் என்ன படம் வருது…அந்தக் காலத்துல வந்த படம் எல்லாம் அப்படி இருக்கும். ஒவ்வொரு படத்தையும் 10-15 தடவை தியேட்டர்லேயே பாத்துடுவேன். தலைவர் படம் என்ன ரிலீசு ஆனாலும் உடனே பாத்துடுவேன். ஒருநாள் அப்படித்தான் வீட்டுக்குத் தெரியாம, போய் படம் பாத்துட்டு வரும்போது பக்கத்து வீட்டு மாமா பார்த்து அப்பாகிட்ட சொல்லிக்கொடுத்துட்டாரு. அப்பா தோலை உரி உரின்னு உரிச்சுட்டார்’ என்று ஆஸ்கார் விருது வாங்கியது மாதிரி பெருமையுடன் கூறிக்கொண்டிருப்பார்.
அப்போ நம்ம மைண்ட் வாய்ஸ்: இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையறீங்க?!
‘சின்ன வயசுல பக்கத்து தோட்டத்துல இருக்க மாங்காய் மரத்துல மாங்காய் அடிச்சு மாட்டிக்கிட்டேன். சைக்கிள்ல இருந்து விழுந்து முட்டில ஒரே அடி. எங்க கிராமத்து பசங்களுக்கும், பக்கத்து கிராமத்து பசங்களுக்கும் சண்டையாவே தான் இருக்கும். நான் படிக்கவே மாட்டேன். அதனால வாத்தியார்கிட்ட அடி வாங்கிட்டே இருப்பேன்’ என்று ஏகப்பட்ட கதைகளை எடுத்துவிடும் அம்மாவும், அப்பாவும்… நாம சின்ன வயதில் இருக்கும்போது ‘படிக்கவே மாட்டேங்குறான்’, ‘சொன்ன பேச்சைக் கேட்கறதே இல்லை’, ‘ஒரே குறும்பு… அடக்கவே முடியல’ என்று பக்கம் பக்கமாக பேரன்ட்ஸ்-டீச்சர் மீட்டிங்கில் குற்றப்பத்திரிக்கை வாசித்தவர்கள் என்பதை மறுக்க முடியுமா இல்லை… மறக்கத்தான் முடியுமா?
நம்ம மைண்ட் வாய்ஸ்: உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்களி சட்னியா?
‘இங்க இருந்து வெறும் 883 கிலோ மீட்டர் மட்டுமே இருக்க கோவாவுக்கு போய், அங்க இருக்க பீச்சுல முழங்கால் வரை கால் நனைச்சுட்டு வரணும்’ என்ற சின்ன ஆசைக்கும், குட்டி டிரிப்புக்கும் தடைப்போடும் பெரியவர்கள், ‘கிணத்துல நீச்சல் அடிக்க கத்துக்கிட்டோம், குளத்துல முங்கு நீச்சல் அடிப்போம், குத்தாலம் போவோம், கூட்டாஞ்சோறு ஆக்குவோம்’ என்று பெருமை பீற்றிக்கொள்ளும்போது உள் இருந்து ஒன்று வருமே…அதைச் சொல்ல வார்த்தைகளே கிடையாது.
அப்போ நம்ம மைண்ட் வாய்ஸ்: தகப்பா…இது உங்களுக்கே நியாயமா இருக்கா?
‘எந்நேரம் பாத்தாலும் போனை நோண்டிட்டே இருக்கறது. கண்ணு என்ன ஆகுமோ’ என்று வசனம் பேசும் அம்மா, அப்பா, அத்தை, மாமாவின் போனில் இருந்து காலையும், இரவும் ‘டான்னு’ ‘Good Morning, Good Night’ மெசெஜ் வந்துவிடும். ஸ்டேட்டஸில் திங்கட்கிழமை பழைய பாடலும், செவ்வாய் கிழமை முருகனும், புதன் கிழமை வாழ்க்கை தத்துவமும், வியாழக்கிழமை சாய் பாபாவும், வெள்ளிக்கிழமை அம்மனும், சனிக்கிழமை பெருமாளும், ஞாயிற்றுகிழமை ஏதாவது சண்டே மீம்ஸும் தவறாமல் இடம் பெற்றுவிடும். ஆன்ட்டீஸ் யூடியூப் ஹிஸ்டரியில் தினமும் எண்ணிலடங்கா டாக்டர் வீடியோக்களும், சமையல் வீடியோக்களும், ஆரோக்கிய குறிப்புகளும் இருக்கும். அங்கிள்ஸ் யூடியூப் ஹிஸ்டரியில் ‘1869-ல என்ன நடந்தது தெரியுமா?-வும், ஸ்டாலின், அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி… ஆகியோரும் ஏகப்பட்ட வீடியோக்களாக இருப்பார்கள்.
நம்ம மைண்ட் வாய்ஸ்: பேச்சா இருந்தாலும்… ஒரு நியாயம் வேண்டாமா?
நாம டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது கல்யாண பந்தியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம் அல்லது அவசரமாக எங்கேயாவது கிளம்பிக்கொண்டிருக்கலாம்… இப்படி என்ன பண்ணிக்கொண்டிருந்தாலும் எங்கேயோ இருந்து பறந்து வரும் பூமர், “என்ன இந்தக் காலத்து பசங்கலாம் இப்படி இருக்கீங்க… நாங்கலாம் அந்தக் காலத்துல ஓடுற பாம்பை கையில பிடிப்போம். இப்போ மாதிரி இல்ல… அப்போலாம் என்ன பாத்தா எல்லாரும் பயப்படுவாங்க, என்ன பாத்தா எங்க முதலாளியே நடுங்குவாரு’ என்று ஏதேதோ பேசுவார்கள். அப்போது அங்கே இருந்து ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் தவிப்போம், பாருங்கள்…
அப்போ நம்ம மைண்ட் வாய்ஸ்: என்னென்ன சொல்றான் பாரு… கம்பி கட்டுற கதையெல்லாம்…
இப்படி உங்க லைஃப்ல நடந்த ஏதாவது குட்டி ஸ்டோரியை கமெண்ட் பண்ணுங்க, மக்களே…