புதுடில்லி, அமெரிக்காவில், சீக்கிய பயங்கரவாதியைக் கொல்ல நடந்த முயற்சியில், இந்திய அதிகாரிக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படும் புகாரை, மத்திய அரசு மறுத்துஉள்ளது. இது எங்களுடைய கொள்கைக்கு எதிரானது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார்.
இதில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது சர்ச்சையானது.
இந்நிலையில், மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுவை, அமெரிக்காவில் கொலை செய்ய முயற்சி நடந்ததாக செய்தி வெளியானது.
இந்த விவகாரத்தில் இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா மற்றும் வேறு சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. செக் குடியரசில் இருந்த நிகில் குப்தா, அமெரிக்காவுக்கு கடந்த ஜூன் மாதம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய அரசு அதிகாரி ஒருவர், நிகில் குப்தாவுக்காக பணியாற்றியுள்ளதாகவும், அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அதில் இல்லை.
இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, தான் கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று முன்தினம் கூறினார்.
இது குறித்து, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறியதாவது:
அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய அதிகாரிக்கும், கொலை முயற்சியில் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டு இருப்பது தீவிரமான பிரச்னை.
இது குறித்து ஆராயப்படுகிறது. அதே நேரத்தில் இது, இந்திய அரசின் கொள்கைக்கு எதிரானது என்பதை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறோம்.
திட்டமிட்ட குற்றங்கள், ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது.
அதுவே, இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம். இது தொடர்பாக விசாரிக்க ஏற்கனவே உயர்நிலை குழு அமைக்கப் பட்டுள்ளது.
கனடாவில், நம் நாட்டுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள், குழுக்கள், தாராளமாக செயல்படுகின்றன. இதுதான் பிரச்னையின் அடிவேர். இது தொடர்பாக கனடா அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்