சின்ன பட்ஜெட் படங்களுக்கும் தியேட்டருக்கு மக்களை கூட்டம் கூட்டமாக வரவழைக்க வேண்டும் என்ற நோக்கில், தயாரிப்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் பேசப்பட்ட ‘ஈரமான ரோஜாவே’, ‘மாயா பஜார்’, ‘அலெக்சாண்டர்’ (விஜயகாந்த்) படங்களைத் தயாரித்தவர் கேயார். ‘மைடியர் குட்டிச்சாத்தான்’, ‘ஸ்பை கிட்ஸ்’ கமலின் ‘பேசும் படம்’ போன்ற படங்களையும் விநியோகித்திருக்கிறார். அவர் இப்போது தனது ‘ஜி.ஆர்.எம் ஸ்டுடியோ’ மூலம் ரவி முரு இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர் நடித்திருக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தை வெளியிடுகிறார் இந்தப் படம் இம்மாதம் 22ம் தேதி வெளியாகிறது. அன்று தியேட்டரில் இந்தப் படத்தின் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என கொடுக்க உள்ளனர். இந்தச் சலுகை முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இலவச டிக்கெட்டுக்கான கட்டணத்தை விநியோகஸ்தரே ஏற்றுக்கொள்வார் என்றும் சொல்கிறார்கள்.

இது குறித்து கேயார் தெரிவித்திருப்பதாவது, “ஒரு படத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பதே முதல் நாள் முதல் காட்சி தான். பெரிய படங்கள் வியாபார ரீதியில் வசூலை அள்ளும் நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சத்துடன் இருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் அதிகளவில் படங்கள் வெளியாவதும் இதற்கு ஒரு காரணம். சிறு பட்ஜெட் படங்களே எடுக்க வேண்டாம் என்று சிலர் கூறி வரும் நிலையில், இந்த சிக்கலுக்குத் தீர்வு இதுவல்ல. ஏதாவது செய்து பார்வையாளர்களை எப்படி திரையரங்குகளை நோக்கி வரவைப்பது என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.

அதற்கு ஒரு தீர்வாகத்தான் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன். பெரிய படங்கள் வந்து மாபெரும் வெற்றி பெறுவது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் சிறு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்றால் தான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும். இன்று பெரிய இடத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறிய படங்களின் மூலம் தங்களது பயணத்தை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிறு பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களை புதுமையான முறையில் ஊக்குவிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தின் விளைவாக இந்த முடிவை எடுத்துள்ளேன்,” என்கிறார் கேயார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனராம்.