புதுடில்லி,“பெண் பணியாளர்களுக்கு அனைத்து நிலைகளிலும் வாய்ப்பு வழங்கும் வகையில், நம் நாட்டின் கடற்படை கப்பலுக்கான முதல் கமாண்டிங் பெண் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்,” என கடற்படை தளபதி ஹரிகுமார் தெரிவித்துஉள்ளார்.
இந்திய கடற்படையின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும், டிச., 4ம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு புதுடில்லியில் கடற்படை தளபதி ஹரிகுமார் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்திய பெருங்கடலில் சீனாவின் அத்துமீறலை முறியடிக்கும் வகையில், 24 மணி நேரமும் இரவு, பகலாக கடற்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ, துாதரக ரீதியிலான நடவடிக்கையின் அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ரோந்து பணியில் போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் அதிகரிக்கப்பட்டுஉள்ளன.
எங்களின் ஒவ்வொரு செயலும் ஆண், பெண் பேதமின்றி நடைமுறைப் படுத்தப்படுகின்றன.
இதனால் தான், நாட்டிலேயே முதன் முறையாக கடற்படை கப்பலுக்கு முதல் பெண் கமாண்டிங் அதிகாரியை நியமனம் செய்துள்ளோம். கடற்படையில் பெண் அக்னி வீரர்களின் பலம் ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடற்படைக்கு நியமிக்கப்பட்டுள்ள பெண் கமாண்டிங் அதிகாரியை பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement