மாஸ்கோ, ”ரஷ்யாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், பெண்கள் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,” என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தி உள்ளார்.
ரஷ்யாவில், 1990ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மேலும், 2022 பிப்ரவரியில், உக்ரைன் நாட்டுடனான போரால், ரஷ்யாவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மாஸ்கோவில் சமீபத்தில் நடந்த உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் கூட்டத்தில், அதிபர் விளாடிமிர் புடின் பேசியதாவது:
ரஷ்யாவின் மக்கள் தொகையை பாதுகாப்பதும், அதிகரிப்பதும் தான் நம் இலக்கு. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ரஷ்யாவின் எதிர்காலம் இதில் அடங்கி உள்ளது.
ரஷ்யாவில் தற்போது ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறைகள் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன.
முந்தைய காலங்களில் நம் தாத்தா – பாட்டிகள், எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றிருந்தனர். இந்த சிறந்த மரபுகளை பாதுகாப்போம்; புத்துயிர் கொடுப்போம்.
அதன்படி, நாட்டில் உள்ள பெண்கள் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். பெரிய குடும்பம் என்பது, அனைத்து மக்களுக்கும் ஒரு வாழ்க்கை முறையாக மாற வேண்டும்.
குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல; அதற்கு ஓர் ஆன்மிக தொடர்புள்ளது. அது, ஒழுக்கத்தின் ஆதாரம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரஷ்யாவில், 2023 ஜன., 1 நிலவரப்படி, 14.64 கோடி மக்கள் தொகை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்