Memorandum of Understanding with Kailasa to deprive Paraguayan government official | கைலாசாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பராகுவே அரசு அதிகாரி பதவி பறிப்பு

பியூனஸ் அயர்ஸ், இந்தியாவில் தேடப்பட்டு வரும் நித்யானந்தாவின் கற்பனை நாடான கைலாசா பிரதிநிதிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஏமாந்ததால், பராகுவே நாட்டு வேளாண் துறை செயலர் பதவி பறிக்கப்பட்டது.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தா, 45. கர்நாடகாவின் பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வந்த இவருக்கு, பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சீடர்கள் உள்ளனர்.

இவர், பாலியல் புகார் உட்பட ஆள் கடத்தல், பண மோசடி என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். கடந்த 2019ல் நித்யானந்தா திடீரென மாயமானார். அவர் நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார்.

அந்நாட்டுக்கு தனிக்கொடி, பாஸ்போர்ட், கரன்சி வெளியிட்டதுடன், இந்தியர்கள் கைலாசா குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அழைப்பு விடுத்தார். இருப்பினும், இந்த கைலாசா என்ற நாடு எங்கு உள்ளது என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இதற்கிடையே, நித்யானந்தாவின் சிஷ்யைகள், ஐ.நா., சபை கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறி அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென் அமெரிக்க நாடான பராகுவேவின் வேளாண் துறை செயலர் அர்னால்டோ சாமோரோ, கைலாசா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டார்.

இந்த விவகாரம் அந்நாட்டு ஊடகங்களில் வெளியானது. கற்பனையான நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது கேலிக்குள்ளானது.

இதையடுத்து, அர்னால்டோவின் பதவி பறிக்கப்பட்டது. கைலாசா நாட்டின் பிரதிநிதிகள், தன்னையும், வேளாண் துறை அமைச்சர் கார்லோஸ் கிமென்சையும் சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.

பராகுவேவுக்கு பல்வேறு உதவிகள் அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.