வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராய்ப்பூர்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது ‛டி-20′ போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நிலையில் அங்கு 2009 முதல் மின் கட்டணம் கட்டப்படாமல், ரூ.3.16 கோடி நிலுவை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிக மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லாமல், கூடுதல் மின் திறன் கோரி விண்ணப்பித்தும் இன்னும் பணிகள் துவங்காததால், போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் இந்தியா வென்றது. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் 4வது ‘டி-20’ போட்டி நடக்கிறது. இப்போட்டியில் மின்சாரம் தடைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் அம்மைதானத்திற்கான மின் கட்டணம் (ரூ.3.16 கோடி) செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு மைதானத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் வைக்கவே மைதானத்தில் தற்காலிக இணைப்பு நிறுவப்பட்டது. அதனை வைத்தே போட்டிகள் நடத்தப்பட்டன.
இன்றைய போட்டியில் மின்தேவை அதிகரித்திருப்பதால், 200 கிலோ வோல்ட்ஸ் ஆக உள்ள தற்காலிக மின் இணைப்பின் திறனை 1 ஆயிரம் கிலோ வோல்ட் ஆக அதிகரிக்க அம்மாநில கிரிக்கெட் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும், அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இதனால், இன்றைய போட்டி நடைபெறுவதற்குள் மின்சார தேவைகள் பூர்த்தியாகி, போட்டி சிக்கலின்றி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement