தெலங்கானா மாநிலத்திலுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று (நவ. 30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தெலங்கானாவில் ஆளுங்கட்சியான பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவுவதாகச் சொல்லப்பட்டாலும், பி.ஆர்.எஸ்-ஸுக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவியது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. அந்தக் கணிப்புகளின்படி பார்த்தால், மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஹாட்ரிக் அடித்துவிட வேண்டும் என்ற பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவின் கனவு பலிக்க வாய்ப்பு இல்லை என்பது தெரியவருகிறது.
தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளிலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதில், டைம்ஸ் நவ் – இ.டிஜி கருத்துக்கணிப்பின்படி, பி.ஆர்.எஸ்ஸுக்கு 37 – 45 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 60 – 70 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏ.பி.சி – சி வோட்டர் கருத்துக்கணிப்பின்படி, பி.ஆர்.எஸ்ஸுக்கு 38 – 54 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 49 – 65 தொகுதிகளும், இந்தியா டி.வி – சி.என்.எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, பி.ஆர்.எஸ்ஸுக்கு 31 – 47 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 63- 79 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
நியூஸ் 24 – டுடேஸ் சாணக்கியா கருத்துக்கணிப்பின்படி, பி.ஆர்.எஸ் கட்சிக்கு 24 – 42 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 62 – 80 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, டி.வி 9 பாரத் – வர்ஷ் கருத்துக்கணிப்பின்படி, பி.ஆர்.எஸ் கட்சிக்கு 48- 58 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 49-59 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தெலங்கானா முதல்வரான கே.சி.ஆர் எனப்படும் கே.சந்திரசேகர ராவ், தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்கியவர். பிறகு, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற துணை சபாநாயகராகவும் பணியாற்றினார். 2001-ம் ஆண்டு, துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியான தெலங்கானா, ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது… என்ற பிரசாரத்தைத் தொடங்கினார்.
‘தெலங்கானாவை தனி மாநிலமாகப் பிரித்தால்தான், அந்தப் பகுதி வளர்ச்சியடையும். எனவே, தனி மாநிலம் பிரிக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து தீவிரமான போராட்டங்களை தெலங்கானா ராஷ்டிர சமிதி நடத்திவந்தது. அதன் விளைவாக, 2014-ம் ஆண்டு ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு, அங்கு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி வெற்றிபெற்று, சந்திரசேகர ராவ் முதல்வரானார். 2018 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று முதல்வர் பதவியைத் தொடர்ந்து வகித்தார்.
இரண்டாண்டுக்கால ஆட்சியில் பல நலத்திட்டங்களை சந்திரசேகர ராவ் செயல்படுத்தினார். ஆனாலும், தெலங்கானா மக்களின் மனநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தெலங்கானாவில் தலித், ஓ.பி.சி., பழங்குடி, இஸ்லாமியர் ஆகிய சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதாவது, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 85 சதவிகிதம் இவர்கள்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களின் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்திய சந்திரசேகர ராவ், இவர்களின் சமூகம் சார்ந்த கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் என்று தெலங்கானாவைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். உயர் கல்வித்துறைக்கு கே.சி.ஆரின் ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. தெலங்கானாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் நிதி இல்லாமல் சிரமப்படுவதாக செய்திகள் வருகின்றன.
ஒரு காலத்தில், போராட்டங்களின் குறியீடாகப் பார்க்கப்பட்ட கே.சி.ஆர்., முதல்வரான பிறகு போராட்டங்களை வெறுக்கும் மனிதராக மாறிப்போனார். போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் உட்பட ஏராளமான போராட்டங்கள் கே.சி.ஆர் ஆட்சியில் ஒடுக்கப்பட்டன. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது ‘உபா’ சட்டத்தை ஏவும் அளவுக்கு கே.சி.ஆர் ஆட்சி கொடூரமானதாக மாறியது
இத்தகைய சூழலில்தான், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வளரத் தொடங்கியது. ஒன்றுபட்ட ஆந்திராவில் நீண்டகாலமாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு, ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடங்கிய பிறகு, காங்கிரஸ் செல்வாக்கு ஆந்திராவில் மங்கத் தொடங்கியது. தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சி மட்டுமே செல்வாக்கு செலுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க., அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகளும் தெலங்கானாவில் வளருவதற்கான பல முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், தெலங்கானாவில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட பிறகு, அங்கு காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்தது. அதன் பிறகு, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியின் தாக்கம் தெலங்கானாவில் இருந்தது.
கர்நாடகாவில் தோல்வியடைந்த பா.ஜ.க., எப்படியாவது தெலங்கானாவில் கால்பதித்துவிட வேண்டும் என்று முயன்றது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பல பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், பி.ஆர்.எஸ் கட்சிக்கு மாற்றாக அங்கு காங்கிரஸ் கட்சியால்தான் வரமுடிந்திருக்கிறது. கே.சி.ஆரின் கோட்டையாக விளங்கிய தெலங்கானா, தற்போது அவரது கையைவிட்டு நழுவிவிடும் போலத் தெரிகிறது.