புதுடில்லி: இன்று (டிச.,1) முதல் விசா இன்றி இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியா செல்லலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக சில நிபந்தனைகளை மலேசிய அரசு அறிவித்துள்ளது.
மலேசியா தங்கள் நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் உலக சுற்றுலா பயணிகளில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள சீனா, இந்தியா நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு டிச.,1 (இன்று) முதல் 2024 டிசம்பர் வரை விசா தேவை இல்லை என்றும், அவர்கள் 30 நாட்கள் வரை தங்கள் நாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த சலுகையின் படி, மலேசியாவிற்கு பயணிக்க உள்ள இந்திய சுற்றுலா பயணிகளுக்கு சில நிபந்தனைகளையும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது,
1. பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் குறைந்தது ஆறு மாதங்கள் இருக்க வேண்டும்.
2. திரும்ப வருவதற்கான விமான டிக்கெட்டையும் வைத்திருக்க வேண்டும்.
3. தங்குவதற்கான ஹோட்டல் முன்பதிவு விபரத்தை வைத்திருக்க வேண்டும்.
4. தங்களது நிதி நிலைமை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
5. வருகைத் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மலேசிய டிஜிட்டல் வருகை அட்டையை (MDAC) கட்டாயம் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான படிவங்கள் https://imigresen-online.imi.gov.my/mdac/main என்ற இணையதளத்தில் கிடைக்கும். இந்த 5 நிபந்தனைகளை மலேசிய அரசு அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement