திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் சென்ற அமலாக்கத் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. ஆனால், இந்த வழக்கில் இருந்து சுரேஷ்பாபு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும், அப்படி விசாரிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ.3 கோடி லஞ்சம் தரவேண்டும் என்றும் அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. முடிவாக, ரூ.51 லட்சம் தருவதற்கு மருத்துவர் சுரேஷ்பாபு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இதற்கான முதல் தவணையாக அமலாக்கத் துறை அதிகாரியிடம் கடந்த மாதம் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2-வது தவணையாக ரூ.20 லட்சம் வழங்குவதற்காக அமலாக்கத் துறை அதிகாரி சொன்னபடி திண்டுக்கல் புறவழிச்சாலை தோமையார்புரம் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே மருத்துவர் சுரேஷ்பாபு நேற்று காலை சென்றுள்ளார்.
முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கும் அவர் தகவல் கொடுத்திருந்தார். இதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் போலீஸார் அப்பகுதியில் மறைவாக காத்திருந்தனர்.
அப்போது, மத்திய பிரதேச மாநில பதிவெண் கொண்ட காரின் பின் பகுதியில் அந்த பணத்தை வைத்துவிட்டு செல்லுமாறு மருத்துவரிடம் அந்த அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, மருத்துவரும் பணத்தை வைத்துவிட்டு செல்ல, ஒருவர் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
சிறிது தூரத்திலேயே லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அந்த காரை மறித்துள்ளனர். ஆனால், கார் நிற்காமல் திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றது.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனே கொடைரோடு சுங்கச்சாவடிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சுங்கச்சாவடியில் கார் நிறுத்தப்பட்டது. பின்தொடர்ந்து சென்ற திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காரை மறித்து அதில் இருந்தவரை பிடித்தனர். காரில் இருந்த ரூ.20 லட்சத்தை கைப்பற்றினர்.
பிடிபட்டவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த அமலாக்கத் துறைஅதிகாரி அன்கித் திவாரி என்பதும், சில மாதங்களுக்கு முன்புதான் இடமாறுதலாகி வந்து தமிழகத்தில் பணிபுரிகிறார் என்பதும் தெரியவந்தது
பின்னர், திண்டுக்கல்லில் உள்ளமாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு தென்மண்டல எஸ்.பி. சரவணக்குமார், டிஎஸ்பி நாகராஜன், ஆய்வாளர் ரூபா கீதாராணி ஆகியோர் அவரிடம் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். பிறகு, அன்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகனா முன்பு இரவு 10 மணிஅளவில் ஆஜர்படுத்தினர்.
இடமாறுதலாகி வந்த சில மாதங்களிலேயே இதுபோன்று தனி ஒரு அதிகாரி செயல்பட வாய்ப்பு இல்லை என்பதால், இதன் பின்னணியில் வேறு சில அமலாக்கத் துறை அதிகாரிகளும் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கின: இதற்கிடையே, திண்டுக்கல் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ஏற்கெனவே லஞ்சமாக பெற்ற ரூ.20 லட்சத்தில் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் சிலருக்கும் அன்கித் திவாரி பிரித்துக் கொடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கூறியுள்ளனர்.
மேலும், இதுபோன்று பலரையும் மிரட்டி, கோடிக்கணக்கில் வசூலித்து உயர் அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.