முதல்வரை நேரில் அழைத்து பேசி தீர்வு காண ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் உள்ள முட்டுக்கட்டையை ஆளுநர் தரப்புதான் தீர்க்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல்வரை நேரில் அழைத்துப் பேசி பிரச்சினைக்கு ஆளுநர் தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.

‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டமசோதாக்கள் மற்றும் அரசின் கொள்கைமுடிவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்துள்ளார். எனவே, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று கோரிதமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் கடந்த20-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘நாங்கள் இந்த வழக்கில் கருத்து தெரிவித்த பிறகே, 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாக்களை கிடப்பில் போட்டு கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்தவழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹ்தகி, பி.வில்சன்: தமிழக அரசு 2-வது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய10 மசோதாக்களையும் ஆளுநர் கடந்த 28-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வேங்கடரமணி: அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, ஒருமசோதாவை நிறுத்தி வைக்கவோ, திருப்பி அனுப்பவோ, குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படியே தற்போது குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள்: ஒரு மசோதா சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதற்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளிக்க வேண்டுமே தவிர, அதை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க முடியாது.

இவ்வாறு வாதம் நடந்தது.

இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

இந்த விவகாரத்தில், ஆளுநர் தரப்பில்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, நீண்ட காலத்துக்கு முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பதாக இருந்தால், அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். ஆளுநர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரம், உயர்ந்த அரசியல் சாசனப்பதவியில் இருப்பவரை கையாள்கிறோம் என்பதும் எங்களுக்கு தெரியும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, அதை திருப்பி அனுப்புவது, குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பது ஆகிய 3 முடிவுகளை மட்டுமே ஆளுநர் எடுக்க முடியும். அதற்கு மட்டுமே அவருக்கு அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உள்ள முட்டுக்கட்டையை ஆளுநர் தரப்புதான் தீர்க்க வேண்டும். இதுதொடர்பாக, முதல்வரை நேரில் அழைத்துப் பேசி பிரச்சினைக்கு ஆளுநர் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.