சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில், இரவு நேரத்தில் அபிஜித் (சைஜூ குருப்) என்பவர் அவரின் மனைவி கௌரியின் (நமீதா பிரமோத்) கண்முன்னாலேயே கொலை செய்யப்படுகிறார். இக்கொலையைச் செய்தது ஒரு பேய் என்று கொலையைப் பார்த்த சிலரும், பெண் என்று போலீஸாரும் யூகிக்கிறார்கள். இந்நிலையில், கௌரியின் தம்பியான நவீன் (காளிதாஸ் ஜெயராம்) கொலைக்கான பின்னணியைக் தேடும்போது, அவரை ஒரு பெண் பின்தொடர்ந்தே வருகிறார். உண்மையில் கொலை செய்தது ஒரு பெண்ணா, பேயா, பின்தொடரும் அந்தப் பெண் யார், அக்கொலைக்கான பின்னணி என்ன போன்ற கேள்விகளுக்கு ஹாரரும் த்ரில்லருமாக ஒரு பதிலைச் சொல்கிறது வினில் ஸ்கரியா வர்கீஸின் ‘அவள் பெயர் ரஜ்னி’ (மலையாளத்தில் ‘Rajni’) படம்.
பதற்றம், கோவம், ஆக்ரோஷம், பயம், குழப்பம் என வெவ்வேறு சூழல்களுக்குத் தேவையான நடிப்பைக் குறையின்றி வழங்கியிருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். ஆனால், தனியாளாக ஒரு காட்சியை தன் தோளில் சுமக்கும் நிலை வரும்போது தடுமாறுகிறார். இன்னும் பயிற்சி வேண்டும் ப்ரோ! மிடுக்கான போலீஸாக மிரட்டலாக அறிமுகமாகிறார் அஸ்வின் கே.குமார். ஆனால், அதற்குப்பின் மிரட்டாமல் மிடுக்கை மட்டும் வைத்துக்கொண்டு போர் அடிக்க வைக்கிறார். ரஜ்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியங்கா சாய் பக்காவான தேர்வு! வெவ்வேறு குணங்களையும், உடலமைப்பையும் கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் மூன்று நிலைகளையும் அட்டகாசமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார். ‘பூ’ ராமு, நமீதா பிரமோத், சைஜு குருப் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையைக் குறைவின்றி செய்திருக்கிறார்கள். கருணாகரன் மூன்று இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். ரமேஷ் கண்ணா, ரெபா மோனிகா ஜான், சௌன் ரோமி ஆகியோர் வந்து போகிறார்கள்.
இரவிலேயே படமாக்கப்பட்ட பெரும்பான்மையான காட்சிகளுக்கு ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளிப்பதிவு முதுகெலும்பாக இருக்கிறது. ஹாரர், த்ரில்லர், சேசிங் என அடுத்தடுத்து மாறும் காட்சிகளுக்குத் தேவையான ஒளி அமைப்பைக் கச்சிதமாகத் தந்திருக்கிறார். ஆனாலும், ஒரு சில ஃப்ரேம்கள் கொஞ்சம் தெளிவில்லாமல், மங்கலாக இருப்பதற்கான குறியீடு என்ன என்பது ஒளிப்பதிவாளருக்கே வெளிச்சம். ஒரு ஹாரர் த்ரில்லருக்கு ஏற்ற பதற்றத்தையும் விறுவிறுப்பையும் படத்தொகுப்பாளர் தீபு ஜோசப்பின் ‘கட்’கள் கடத்தியிருக்கின்றன. ‘4 மியூசிக்’இன் இசையில் பாடல்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. ஆனால், உயிர்ப்பில்லாமல் தத்தளிக்கும் திரைக்கதைக்குப் பின்னணி இசைதான் வாழ்க்கை கொடுக்கிறது. பரபரப்பிலும் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் ‘4 மியூசிக்’இன் உழைப்பு கச்சிதம். பிரதான கதாபாத்திரம் ஒன்றுக்கான இருவேறுபட்ட ஒப்பனையில் தன் பெயரைப் பதிக்கிறார் ஒப்பனைக் கலைஞர் ரோனெக்ஸ் சேவியர்.
மர்மமான ஒரு கொலை, அதனால் உடைந்து அழும் குடும்பம், காவல்துறை விசாரணை, களத்தில் இறங்கும் கதாநாயகன் என ஒரு பக்கா த்ரில்லருக்கான அடித்தளத்தோடு தொடங்குகிறது படம். கூடுதலாக, ஹாரரும் கைகோர்க்கச் சுவாரஸ்யமாகவே நகர்கிறது முதற்கட்ட திரைக்கதை.
ஆனால், காவல்துறை விசாரணை என அடுத்தகட்டத்தைத் தொடும்போதுதான் தடுக்கி விழுகிறது. அத்தனை கொடூரமாக நடத்தப்பட்ட கொலைக்கான பின்னணியை மிகவும் மெத்தனமாகவே கையாள்கிறது காவல்துறை. படத்தில் காட்டப்பாடும் விசாரணை முறைகளுக்கு எல்லாம் ‘தங்கப்பதக்கம்’ காலத்திலேயே விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு, தற்போது புழக்கத்திலிருந்தே அவை மறைந்துவிட்டன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சமகால காவல்துறையின் விசாரணை முறையைக் கொஞ்சமாவது திரைக்கதையில் கொண்டு வந்திருக்கலாம்.
இவ்வளவு போராடியும் காவல்துறை சொதப்பவே செய்கிறது. அதனால் கொலை தொடர்பான விசாரணையைக் கதாநாயகன் என்ற முறையில் காளிதாஸே தன் தோளில் சுமக்கிறார். கதாநாயகனின் களவிசாரணையில் சற்றே சுவாரஸ்யமான காட்சிகள் வருவது ஆறுதல். புலனாய்வு திறன், யூகிக்கும் திறன், ஆக்ஷன் என எல்லாவற்றிலும் அடித்து விளையாடும் கதாநாயகனிடம் படத்தில் காட்டப்படும் காவல்துறை பாடம் படிக்க வேண்டும் போல! இத்தனை லாஜிக் ஓட்டைகளை மறைப்பது, ஓரளவிற்கு ‘திக் திக்’ என நகரும் காட்சியாக்கமும் அதற்குக் கைகொடுத்திருக்கும் தொழில்நுட்ப ஆக்கமும்தான்.
பிரதான கதாபாத்திரமான ரஜ்னிக்கு வைக்கப்பட்ட பின்கதையில் நம்பத்தன்மை இல்லாமல் இருந்தாலும், கதாபாத்திரங்களின் நடிப்பாலும் கச்சிதமான காட்சித்தொகுப்பாலும் சுவாரஸ்யம் சேர்க்கிறது. ஆனாலும், அந்தப் பின்கதை அதுவரையில் பின்னப்பட்ட திரைக்கதையோடு சுருதி சேராமல் அந்தரத்தில் தொங்குகிறது. எளிதில் யூகிக்கும்படியாக இருக்கும் இறுதிக்காட்சியை வலுக்கட்டாயமாக இழுத்திருக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் `அவள் பெயர் ரஜ்னி’ பேர் சொல்லும்படி இல்லை என்றாலும் சற்றே சுவாரஸ்யமான ஒன்லைனாலும் ஆக்கத்தாலும் ஒரு சராசரி த்ரில்லராக பாஸ் மார்க் பெறுகிறது.