காந்திநகர்,
இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டம் மும்பை-ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு 1.08 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில் இந்திய அரசு ரூ.10,000 கோடியும், குஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் தலா ரூ.5,000 கோடியும் வழங்குகின்றன. மேலும் இத்திட்டத்திற்கான நிதியை 0.1 சதவீதம் வட்டி விகிதத்தில் இந்தியாவிற்கு ஜப்பான் கடனாக வழங்குகின்றது.
இந்த புல்லட் ரெயில் திட்டத்திற்கு ஆமதாபாத்தில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றன. ஜப்பான் அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி போக்குவரத்து மையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய புல்லட் ரெயில் நிலையத்தின் வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் நிலையம் என குறிப்பிட்டு மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.