கும்பகோணம் அருகேயுள்ள மாதுளம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் 2018-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் சக்திவேலை, அந்த நபர்கள் அரிவாளால் வெட்டியிருக்கின்றனர். அதில் படுகாயமடைந்த சக்திவேல் சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பினார். இது தொடர்பான வழக்கு போலீஸ் விசாரணையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி சக்திவேல் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த மாதுளம்பேட்டை, சந்திரன் நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காளிதாஸ், கும்பகோணம், காளியாப்பிள்ளைத் தெருவைச் சேர்ந்த ராஜகுரு, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்தி, எல்லை செட்டித் தெருவைச் சேர்ந்த ராஜகோபால், ராஜாராம் காலனியைச் சேர்ந்த விஜய், பரணிதரன் ஆகிய 7 பேரும் சக்திவேல் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.
சக்திவேலிடம் பேசிய அவர்கள், “உன்னை நாங்கள் வெட்டிய வழக்கில் சமாதானமாகப் போய் விடலாம்” என்றதுடன், “வா வெளியில் போய்விட்டு வரலாம்” என சக்திவேலை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். “எனக்கு சரியாகப் படலை, நீ போக வேண்டாம் சக்தி” என அவரின் தாய் சங்கீதா தடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் விடாமல் அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அதன் பிறகு சக்திவேல் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அடுத்த நாள் சக்திவேல் மோரி வாய்க்காலிலுள்ள சாக்கடைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, “என் மகனை அழைத்துச் சென்ற ஏழு பேரும், அவனைக் கொலைசெய்து சாக்கடைத் தொட்டியில் புதைத்துவிட்டனர்” என சங்கீதா கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், ஏழு பேரும் சேர்ந்து சக்திவேலைக் கொலைசெய்தது உறுதியானது. இதனையடுத்து நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவர்களைக் கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு, கும்பகோணம் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் பரணிதரன், விஜய் ஆகிய இருவரும் சமீபத்தில் இறந்துவிட்டனர். இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ராதிகா, இறந்த இரண்டு பேரைத் தவிர மற்ற ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.6,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.