பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டத்தில், தடகள வீராங்கனையான 15 வயது சிறுமியை, 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாகப் போதை மருந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, மம்தாட் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
சம்பவம் நடந்த அன்று, பாதிக்கப்பட்ட சிறுமி தடகள பயிற்சிக்காக, அதிகாலை ஆறு மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். சிறுமி தனது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தபோது, அவரது கிராமத்தைச் சேர்ந்த லுவ்பிரீத் சிங் உட்பட நான்கு பேர் சிறுமிக்கு எதிரே வந்திருக்கின்றனர். அப்போது, அந்த நால்வரும் சிறுமிக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்தைக் கொடுத்திருக்கின்றனர்.
அதன்பின்னர், சிறுமி தன்னுடைய சுயநினைவை இழந்ததும், நால்வரும் அவரை வேறொரு இடத்துக்கு கொண்டுசென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பிறகு, எப்படியோ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி, நேராக மம்தாட் காவல் நிலையத்துக்குச் சென்று, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துப் புகாரளித்து வாக்குமூலம் கொடுத்தார்.
பின்னர், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட லுவ்பிரீத் சிங், பம்மா சிங், ஜஸ்பிரீத் சிங், குர்மீத் ஆகிய நால்வர் மீதும் போக்சோ சட்டம் உட்பட இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 376-ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். போலீஸார், தொடர்ந்து விசாரணையிலும் ஈடுபட்டுவருகின்றனர். அதேசமயம், ஆபத்தான நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறுமி, தற்போது அபாய கட்டத்தைக் கடந்துவிட்டார்.