புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெர்னாட் ரிச்சர்ட் மதுபான நிறுவனத்தின் மூத்த அதிகாரியான பெனோய் ரிச்சர்டுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த ஜாமீன் உத்தரவின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்என்வி பட் அடங்கிய அமர்வு சில குறிப்பிடத்தக்க கருத்துகளைத் தெரிவித்தது. “வழக்கு விசாரணைக்கு முன்பாக ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது. அது முறையும் கிடையாது. இந்த வழக்கில் மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை அறிக்கைக்கும், அமலாக்கத் துறை இயக்குனர அறிக்கைக்கும் முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. இது எப்படி நடக்கும் என்று புரியவில்லை என்று தெரிவித்தது. மேலும், பினோய் பாபு ஏற்கெனவே 13 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள உண்மைக் காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் பாபுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி ரோஸ் அவனியூ நீதிமன்றம் மறுத்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது. மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் நான்கரை மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கும் அளவுக்கான வழக்கு இல்லை இது. குற்றம்சாட்டப்பட்டவர் மிகவும் தீவிரமான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி குற்றச்சாட்டின் தீவிரத்தை புறக்கணிக்க முடியாது. பினோய் பாபுவின் வழக்கமான ஜாமீன் மனுக்கள் ரோஸ் அவனியூ நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பினோய் பாபு கடந்த 2022, நவ.10-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இதே வழக்கு காரணமாக, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்ட பலர் கைது செய்ப்பட்டுள்ளனர். சிசோடியா பிப்ரவரி முதலும், சஞ்சய் சிங் அக்டோபர் முதலும் சிறையில் உள்ளனர். இந்த மதுபான கொள்ளை ஊழல் வழக்கு டெல்லி ஆம் ஆத்மி அரசு மற்றும் பாஜகவுக்கு இடையில் அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை அக்.30-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை 6-8 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.