புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது. மின் மீட்டருக்கான பணத்தை 90 மாதங்களில் திருப்பி செலுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் போல் மின்சாரம் பயன்படுத்த முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் சூழல் கட்டாயமாகிறது.
புதுச்சேரியில் ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் கடந்த 2022 பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதற்கு ரூ.251 கோடியில் மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது. மத்திய அரசு அனுமதி தந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இத்திட்ட ஆலோசனைக்கு பிஎப்சி கன்சல்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுத்தானது.
தற்போது மின் பயன்பாட்டுக்கு பிறகு கட்டணம் செலுத்தும் முறை மாறி, செல்போன் போல் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் நிலையால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தும் அதை அரசு ஏற்கவில்லை. ஆளுநர் தமிழிசையும் அதற்கு ஒப்புதல் தந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் ப்ரீபெய்ட் மின் மீட்டரை பொருத்த பிஎப்சிசிஎல் நிறுவனத்துக்கு அனுமதியை மின்துறை தந்துள்ளது. அதற்கு ரூ. 393 கோடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இதுபற்றி புதுச்சேரி சார்பு செயலர் முருகேசன் பிறப்பித்துள்ள உத்தரவு: புதுச்சேரியில் டோடெக்ஸ் முறையில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் வீடுகளில் பொருத்தப்படவுள்ளது. இதற்கான திட்டத்தை செயல்படுத்தும் ஏஜென்சியாக பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் கன்சல்டிங் நிறுவனம் (பிஎப்சிசிஎல்) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறையும் அனுமதி தந்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.393.62 கோடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
இதற்கு நிதித்துறை ஒப்புதல் தந்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஏற்கெனவே ரூ.250.16 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும், திட்டத்தை செயல்படுத்த அதிக நிதி தேவைப்பட்டதால் மறுசீரமைப்பு செய்து கூடுதல் தொகைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதில் மொத்தமுள்ள 4.07 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க ரூ.370.57 கோடி செலவாகிறது. இதில் மின் மீட்டர் வாடகை என்ற அடிப்படையில் 90 மாதங்களில் ரூ.369.70 கோடியை புதுச்சேரி அரசு திருப்பி செலுத்தும். மின்துறை இதற்கான கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.