புதுடெல்லி: மஹுவா மொய்த்ரா நடந்துகொள்ளும் விதம் நெறிமுறையற்றது என்றும், அவரது செயல் கண்டிக்கத்தக்கது என்றும் பாஜக எம்பியும், மக்களவை நெறிமுறைக் குழு உறுப்பினருமான அபராஜிதா சாரங்கி தெரிவித்துள்ளார்.
தனது எம்பி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, ”நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணமோ, பொருட்களோ பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. எனது மின்னஞ்சலை பயன்படுத்தும் அதிகாரம் பகிரப்பட்டது என்ற ஒரே ஒரு ஆதாரத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு உள்ளது. அப்படிப் பார்த்தால் மின்னஞ்சல் விவரங்களைப் பகிரக் கூடாது என்ற சட்டதிட்டங்களும் இல்லை. ஒருவேளை, நாடாளுமன்றத்தில் என் வாயை அடைத்துவிட்டால் போதும், அதானி பிரச்சினை தீர்ந்துவிடும் என மோடி அரசு நினைக்கிறதுபோல். ஆனால், நீங்கள் ஒரு பெண் எம்.பி.யின் வாயை அடைக்க எந்த எல்லை வரை செல்வீர்கள் என்பதையே இந்த பதவிப் பறிப்பு நிகழ்வு காட்டுகிறது. மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு என்னை வெளியேற்ற எந்த அதிகாரமும் இல்லை. நெறிமுறைக் குழு உருவாக்கப்பட்டதன் நோக்கம் இதுவே அல்ல” என தெரிவித்திருந்தார்.
அவரது இந்த பேட்டி குறித்து பாஜக எம்பியும், நெறிமுறைக் குழு உறுப்பினருமான அபராஜிதா சாரங்கியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அபராஜிதா சாரங்கி, ”நானும்கூட ஒரு பெண்தான். பெண்ணோ ஆணோ நாங்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் தங்கள் கடமையை செய்ய வேண்டும். பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட வேண்டும். மஹுவா மொய்த்ரா நடந்துகொள்ளும் விதமானது நெறிமுறையற்றது. எனவே, அது கண்டிக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சி எம்பிக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றால், அவர்களும் தவறுக்கு துணை போகிறார்கள் என்றுதான் அர்த்தம்.
மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அனைத்து எம்பிக்களுக்கும் ஒரு பாடம். எம்பியாக பதவி ஏற்பவர்கள் அதற்கான பிரமாணத்தை எடுத்துக்கொள்கிறோம். எம்பிக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. மஹுவா மொய்த்ரா ஒழுங்கு தவறினார். இது வெளிப்படையாக தெரிந்தது. அதன் காரணமாகவே அவர் மக்களவையில் இருந்து நீக்கப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவர் தன்னை பாதிக்கப்பட்டவராகக் காட்டிக் கொள்கிறார். இதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.