சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சனிக்கிழமை சென்னை வருகிறார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து சென்னை மீண்டு வருகிறது என கூறினாலும், வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தேங்கிய மழை நீர் குறைந்தபாடில்லை. மழைநீரால் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
வெள்ள சேங்களை ஆய்வு செய்வதற்காக கடந்த டிசம்பர் 7-ம் தேதி சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இதையடுத்து தமிழகத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இரண்டாம் தவணை ரூ.450 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், சனிக்கிழமை சென்னை வருகை தரும் ராஜீவ் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் முடிச்சூர், வரதராஜபுரம், சென்னையின் மேற்கு மாம்பலம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.