மிக்ஜாம் பாதிப்பு | சேதமான வாகனங்களுக்கு விரைந்து காப்பீட்டுத் தொகை வழங்க நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தல்

சென்னை: மிக்ஜாம் புயலால் சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு வகையான வாகனங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் சேதமடைந்துள்ளன. காப்பீடு செய்யப்பட்ட சேதமடைந்த வாகனங்களுக்கு விரைவாக காப்பீட்டுத் தொகையை வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தமிழகத்தில் உள்ள முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், மோட்டார் வாகன விற்பனையாளர் சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோருடன் இன்று (8.12.2023) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலத்தின் 13 முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், இதுவரை 600 இருசக்கர, 1275 நான்கு சக்கர மற்றும் 445 வணிக வாகனங்கள் என மொத்தம் 2,320 மோட்டார் வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகைக்கான விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன எனத் தெரிவித்தனர். இதனையும் இனிவரும் நாட்களில் பெறப்படும் காப்பீட்டு விண்ணப்பங்களையும் உடனடியாக தீர்வு செய்வதற்கு அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், புயலால் பாதிக்கப்பட்ட இத்தருணத்தில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களுக்கு உதவும் விதமாக விரைந்து செயலாற்றவும் வலியுறுத்தினார். அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும் குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலமாகவும், உதவி மையங்கள்/ சிறப்பு முகாம்கள் அமைத்தும் எளிதான முறையில் வாகன காப்பீட்டுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்திடவும், பொதுமக்களுக்கு காப்பீட்டுகளின் மூலம் இழப்பீடுகளை பெறுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

இப்பேரிடர் நிவாரண காலத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட உதவிடும் வகையில் சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட அமைச்சர் வலியுறுத்தினார். பேரிடரின் தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் பொது மக்களுக்கு உதவிடும் வகையில் நெறிமுறைகளை இயன்றவரை எளிதாக்கி இழப்பீட்டினை வழங்கிட அறிவுறுத்தினார்.

மோட்டார் வாகன விற்பனையாளர் சங்கக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்று, வாகனங்களை பழுதுபார்ப்பதற்கு காலி இடங்களை கண்டறிந்து அரசு தரப்பிலிருந்து தற்காலிகமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சேதமடைந்த வாகனங்களை பழுதுபார்ப்பு நிலையங்களுக்கு மொத்தமாக கொண்டு செல்வதற்கான இழுவை வாகனங்களை பிற மாவட்டங்களிலிருந்து கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் துறை சார்ந்த மற்ற அலுவலர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவில், அமைச்சரின் வழிகாட்டுதல்களை ஏற்று அரசுடன் இணைந்து மிக்ஜாம் புயலால் சேதமடைந்த காப்பீடு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களை விரைவாக பழுதுபார்த்துத் தரவும், காப்பீட்டுத் தொகையினை விரைந்து வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்மந்தப்பட்ட அமைப்பினர் உறுதி அளித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.