ஐஸ்வால்: மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்றார். மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மிசோரமில் ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 27 தொகுதிகளைக் கைப்பற்றி சோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, மிசோ தேசிய முன்னணியின் தலைவரான சோரம் தங்கா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில், மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்றார். இதையடுத்து, சோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 11 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அனைவருக்கும் மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில், முன்னாள் முதல்வர் சோரம் தங்கா, மிசோ தேசிய முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றக் கட்சித் தலைவர் லால்சந்தாமா ரால்டி, முன்னாள் முதல்வர் லால் தான்ஹாவ்லா உள்ளிட்டோர் பங்கேற்று, புதிய ஆட்சியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
முன்னதாக, சோரம் மக்கள் இயக்கத்தின் சட்டமன்றக் குழு தலைவராக லால்துஹோமாவையும் துணைத் தலைவராக சப்தங்காவையும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்கிழமை தேர்வு செய்தனர். சோரம் மக்கள் இயக்கம் கடந்த 2019ம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்படுவதற்கு முன் கடந்த 2018-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இயக்கம் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.