வெற்றிமாறன் – கலைப்புலி தாணு – சூர்யா கூட்டணியில் திட்டமிடப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தின் பலவிதமான ரைட்ஸும் பூஜை போடப்பட்டபோதே விற்கப்பட்டுவிட்டன. பூஜை முடிந்து பல வருடங்களான நிலையில், படத்துக்குத் திட்டமிடப்பட்ட பட்ஜெட் பல கோடிகளாக இப்போது மாறியிருக்கிறதாம். குறைவான தொகைக்கு ரைட்ஸ் விற்கப்பட்டிருக்கும் நிலையில், படத்துக்கான பட்ஜெட்டை மட்டும் எப்படி மாற்ற முடியும் என்கிற யோசனையில் இருக்கிறார் தாணு. இதற்கிடையில், ‘விடுதலை பார்ட்-2’ படத்துக்காக இன்னும் ஐந்து மாதங்கள் அவகாசம் கேட்டிருக்கிறாராம் வெற்றிமாறன். அதனால், ‘வாடிவாசல்’ திறக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள்.
இயக்குநர் அருள்செழியனின் ‘குய்கோ’ நல்ல விமர்சனங்களால் கவனம் ஈர்த்த நிலையிலும், போதிய திரையரங்குகள் கிடைக்காததால், எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. ‘குய்கோ’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்தபோது திட்டமிடப்பட்ட பட்ஜெட்டுக்குள்ளேயே படத்தை முடித்துக்கொடுத்தாராம் அருள்செழியன். அதனால், அருள்செழியனை வைத்துப் படம் பண்ணலாம் என்கிற நம்பிக்கையைத் தயாரிப்பாளர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறதாம் ‘குய்கோ’ படம்.
எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஸ் கல்யாணின் அட்டகாச நடிப்பிலும், யதார்த்த கதையிலும் மிகுந்த கவனம் ஈர்த்திருக்கிறது ‘பார்க்கிங்’ படம். ஏற்கெனவே மூன்று முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்த முறை ரிலீஸ் நேரத்தில் மழை பின்னி எடுத்தது. ஹரீஸ் கல்யாணின் சமீபத்திய பல படங்கள் தோல்வியைத் தழுவிய நிலையில், மிகப்பெரிய கவனம் பெற்றிருக்க வேண்டிய ‘பார்க்கிங்’ படமும் மழை வெள்ளப் பரபரப்பில் காணாமல் போய்விட்டது. ஓடிடி தளத்தில் ரிலீஸாகும்போது ‘பார்க்கிங்’ படத்துக்கான கவனம் பெரிதாகும் என ஹரீஸுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள் நண்பர்கள்.
‘பருத்திவீரன்’ பஞ்சாயத்து பெரிதாகிக்கொண்டே போன நிலையில், அத்தனை களேபரங்களுக்கும் ஆரம்பப்புள்ளியான தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மும்பையில் டேரா போட்டிருக்கிறாராம். அஜய் தேவ்கானை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படத்தைத் தொடங்கவிருக்கும் ஞானவேல் ராஜா, அதற்கான வேலைகளில் தீவிரமாகியிருக்கிறாராம். கூடவே, பாலிவுட்டில் ஒரே நேரத்தில் நான்கு படங்களுக்கான பூஜையையும் போடவிருக்கிறாராம். “நூறு கோடி முதலீட்டை பாலிவுட்டில் இறக்கும் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீருக்குக் கொடுக்க வேண்டிய ஒரு கோடி ரூபாயை மறுப்பது நியாயமா?” என்கிறார்கள் விஷயப் புள்ளிகள்.
வெள்ள பாதிப்புகள் தீவிரமான நிலையில், ஆளும் தரப்பின் வாரிசுக்கு நட்சத்திரங்கள் பலரும் போன் பண்ணினார்களாம். களப்பணி எனச் சொல்லி எவருடைய போனையும் வாரிசால் ஏற்க முடியவில்லையாம். மிக நெருக்கமான சங்க ஹீரோ, விளையாட்டு ஹீரோ போன்றவர்கள் அரசுக்கு எதிராகச் சீறிய பின்னணி இதுதானாம்!