யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான மேலும் பஸ் வண்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது நெடுந்தீவில் இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன், அதன் பயணத் தடவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இந்தியக் கடன் யோசனை முறையின் கீழ் கிடைக்கப்பெற்ற பஸ்களில் 15 பஸ்களை யாழ்ப்பாண டிப்போவிற்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். அடுத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு வருகை தரும் போது இது தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்திய கடன் யோசனை முறையின் கீழ் கிடைக்கப்பெற்ற 500 பஸ்களும் நாடு பூராகவும் உள்ள 107 டிப்போக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
திருத்தப்பட்ட 400 பஸ்களில் 175 பஸ்கள் தற்போது டிப்போக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய மீதமான பஸ்களை இவ்வருட இறுதியில் டிப்போக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் விபரித்தார்.
நெடுந்தீவில் முற்பகல் 6.30மணி மற்றும் பிற்பகல் 10.30மணி ஆகிய வேளைகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் ஓடுகின்றன.
அவை போதுமானதாக இல்லை என்றும் எதிர்காலத்தில் மேலும் பயணத் தடவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்படும். தற்போது இத்தீவில் வீதிகள் புதுப்பிக்கப்பட்டதும் இது தொடர்பாக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தென் மாகாணத்தில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சகல வசதிகளும் வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். தான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் மஹிந்தோதய இரசாயன ஆய்வுகூட வசதிகளை நெடுந்தீவு பிள்ளைகளுக்கும் வழங்கியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த உள்நாட்டு யுத்த காலத்தில் இவ்வீதிகள் அனைத்தும் அழிந்து காணப்பட்டன. வடக்கு வசந்தத்தின் கீழ் நன் அபிவிருத்தி செய்தே ன். எதிர்காலத்தில் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் வீதி அபிவிருத்தியை அதிகரிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.