சென்னை: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து இரு தொழிளாலர்கள் உயிரிழந்த வழக்கில் கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் கட்டுமான பணியிட மேற்பார்வையாளர் ஆகியோரை கைது செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவல்: டிச.4 அன்று 7.30 மணியளவில் கிண்டி – ஐந்து பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG பங்கின் கண்டெய்னராலான ஜெனரேட்டர் அறை, கனமழையின்போது அருகிலிருந்த கட்டுமான பள்ளத்தில் விழுந்துள்ளது. மேற்படி கேஸ் பங்கிலிருந்த மூன்று ஊழியர்களும், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பணியாளரும் மேற்படி பள்ளத்துக்குள் சிக்கிக்கொண்டனர். சென்னை பெருநகர காவல்துறையினரும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரும் சம்பவயிடத்துக்கு விரைந்து, போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டதன் பயனாக, அன்றைய தினமே பங்கின் இரு ஊழியர்கள் மீட்கப்பட்டனர்.
டிச.5 அன்று 4.30 மணியளவில், வேப்பேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரும், வேளச்சேரி ராம் நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரும், மேற்படி பள்ளத்தில் முறையே ஜெயசீலன் (கட்டுமான பணியிட பணியாளர்) மற்றும் நரேஷ் (பங்க் ஊழியர்) ஆகியோர் சிக்கிக்கொண்டது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக, ‘Man Missing’-ன் கீழ் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
காவல் துறை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் மூத்த அதிகாரிகள், உடனடியாக சம்பவயிடத்துக்கு சென்று மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். டிச.4 அன்று, தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மேற்படி இடத்துக்கு சென்று, காவல் துறை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை , சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இச்சூழ்நிலையில், டிச.6 அன்று 3.30 மணிக்கும், 3.58 மணிக்கும் இடையே, மேற்படி பள்ளத்தில் சிக்கிக்கொண்ட இருவரின் குடும்பத்தினர், ஐந்து பர்லாங் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தலையிட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைமை இயக்குநர், டிச.7 அன்று சம்பவயிடத்துக்கு சென்று, செயல்படுத்தப்பட்டு வந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையில், டிச.8 அன்று 4.45 மணியளவில், மேற்படி பள்ளத்திலிருந்து நரேஷ் (21 வயது) என்பவரது உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. முழுமையாக வாசிக்க > வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் மேலும் ஒரு தொழிலாளரின் சடலம் 4 நாட்களுக்குப் பின் மீட்பு
இந்நிலையில், ‘Man Missing’என்று பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கின் பிரிவு டிச.8 அன்று இந்திய தண்டனை சட்டப்பிரிவாக 304 (ii) ஆக மாற்றம் செய்யப்பட்டு, அண்ணா நகர், Green Tech Structural Constructions நிறுவன உரிமையாளர் சிவகுமார், சேலையூரைச் சேர்ந்த கட்டுமானப் பணியிட மேற்பார்வையாளர் எழில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான பணியிட மேற்பார்வையாளர் சந்தோஷ் ஆகியோர் மேற்படி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர், எழில் மற்றும் சந்தோஷ் ஆகியோரை காவல்துறையினர் டிச.8 அன்று கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். சிவகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோரை விரைவில் பிடிக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, L&T நிறுவனம் 20 HP மோட்டார் , இரண்டு JCB இயந்திரங்கள் மற்றும் ராட்சத கிரேன் ஆகியவற்றை உபயோகப்படுத்தி, டிச.8 அன்று 1.44 மணியளவில் ஜெயசீலனின் (32 வயது) உடலை வெளிக்கொணர்ந்தனர். அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ‘Man Missing’வழக்கும் இந்திய தண்டனை சட்டப்பிரிவாக 304 (ii) ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளும் புலன் விசாரணையில் உள்ளன. மேற்படி இடத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அங்கு போதிய காவல்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.