கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’.
இந்தப்படத்தில் இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். கவுதம்மேனன் எழுதி இயக்கி தயாரித்துமிருக்கிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு சிக்கல்களால் தாமதமாகிவந்தது. பல தடைகளைத் தாண்டி நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நவம்பர் 23 நள்ளிரவில் படம் வெளியாகாது என்று அறிவித்தார்.
அதன்பின், நவம்பர் 28 ஆம் தேதி வெளியிட்ட பதிவில், : ஒரு பார்வை,. நிறைய கனவு. உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவையே பேப்பரில் இருந்த ‘துருவ நட்சத்திரம்’ கதையை இன்று திரைப்படமாகக் கொண்டு வந்துள்ளது. அனைத்தும் எங்களுக்கு எதிராக இருந்தபோதும்கூட, எங்களது கனவும், அர்ப்பணிப்பும்தான். இந்தத் திரைப்படத்தை விரைவில் உங்களுக்காகத் திரையரங்குகளில் கொண்டு வர உதவப் போகிறது.
நவம்பர் 24 அன்று திரைக்கு வரும் என்று நாங்கள் அறிவித்தபோது, அதனை சாத்தியமாக்க நாங்கள் மலைகளை நகர்த்த முயற்சித்தோம். எங்களால் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியாமல் போனது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை என்று சொன்னால் நாங்கள் கூறுவது பொய்யாகிவிடும். நாங்கள் படத்தைக் கைவிடவில்லை என்று பார்வையாளர்களுக்கு உறுதிப்படுத்தவே இந்த அறிக்கை. எங்களது சக்திக்கு உட்பட்டும், மீறியும், இந்தத் தடைகளைக் கடந்து, படத்தைத் திரைக்குக் கொண்டுவர அனைத்தையும் செய்துகொண்டு இருக்கிறோம்.
பார்வையாளராகிய நீங்கள் அனைவரும்தான் எங்களுக்கான ‘சியர்லீடர்ஸ்’. உங்களிடமிருந்து கிடைக்கும் முடிவில்லா அன்பும், ஆதரவும் மகிழ்ச்சியாகவும் உறுதுணையாகவும் இருக்கிறது. எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன, எங்களது வலிமைக்கான தூண்களாக இருக்கும் உங்களுக்கு நன்றி தெரிவிக்க இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறோம்.
இந்த இறுதிக் கட்டத்தை நோக்கி நாங்கள் செல்லும்வேளையில், எங்களது படைப்பை உங்களிடம் பகிரும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் இப்படம் வெளிச்சத்தை காணும். ஜான் மற்றும் பேஸ்மெண்ட் டீமின் சினிமா பயணத்தை உங்களுடன் தொடங்க நாங்கள் காத்திருக்கிறோம்” இவ்வாறு கௌதம் மேனன் தனது பதிவில் கூறியிருந்தார்.
அப்படி என்ன சிக்கல்?
நீதிமன்றத்துக்கு வந்த வழக்கில் சுமார் மூன்று கோடி ரூபாய்தான் சிக்கல். ஆனால், அதையும் சேர்த்து மொத்தம் அறுபது கோடி ரூபாய் பணம் இருந்தால்தான் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் வியாபாரம் நல்லபடியாக நடந்திருந்தால் இந்தச் சிக்கலே இருந்திருக்காது என்கிறார்கள்.
இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, ஓடிடி மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமை ஆகிய எதுவும் விற்பனை ஆகவில்லை. இந்த விற்பனைகள் சரியாக நடந்திருந்தால் சுமார் ஐம்பது கோடி ரூபாய்க்கும் மேல் கிடைத்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் படமும் வெளியாகியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இவற்றுக்கானத் தீவிர முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. படத்துக்கான விலை சரியாக அமையாததால் இழுத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் எல்லாவற்றையும் சரிசெய்து படத்தை வெளியிட்டுவிடத் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் கெளதம் மேனன்.