புவனேஸ்வர், ஒடிசா மதுபான ஆலையில் மூன்றாவது நாளாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில், 150 பைகளில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் சோதனையில் இதுவரை இங்கு, 220 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ள மதுபான நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 6ம் தேதி முதல், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வீடுகள், அலுவலகம், குடோன் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை
ஒடிசாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், பொலாங்கீர், திதிலாகர், பவுத், சுந்தர்கர், ரூர்கேலா ஆகிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று வரை 150 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று மட்டும் மூட்டை மூட்டையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, பொலாங்கீர் மாவட்டத்தில் சூடாபடா பகுதியில் மதுபான ஆலைக்கான அலுவலகத்தில் இருந்து, 150 பண மூட்டைகளை அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர். 30க்கும் மேற்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்களால், அதிலிருந்த பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
நிறுவன உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாஹுவின் வீட்டிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 12 பேர் அடங்கிய குழு, தனித்தனி குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டன.
வலியுறுத்தல்
ஜார்க்கண்டின் ராஞ்சி, லோஹர்தாகா ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இதுவரை, 220 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறிய அதிகாரிகள், அது மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
இதற்கிடையே, பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, ஒடிசா மாநில பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
உள்ளூர் எம்.எல். ஏ.,க்கள், அமைச்சர்களின் உதவி இல்லாமல் இது போன்ற வரி ஏய்ப்பு சாத்தியமில்லை என்பதால், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சி கோரியுள்ளது.
பிரதமரின் வாக்குறுதி
பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக முன்னணி செய்தித்தாளில் வெளியான படத்தை, பிரதமர் நரேந்திர மோடி தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் தன் பதிவில் கூறியுள்ளதாவது:நாட்டு மக்கள் இதை பார்க்க வேண்டும். நேர்மையின் முகமாக இருக்கும் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய அரசியல் தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து திருடப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீண்டும் மக்களிடமே ஒப்படைக்கப்படும். இது மோடியின் வாக்குறுதி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்