மாஸ்கோ: ரஷ்யாவின் பொதுத் துறை வங்கியான விடிபி சார்பில் தலைநகர் மாஸ்கோவில் அண்மையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற் றது. ‘ரஷ்யா அழைக்கிறது’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்தியா, ரஷ்யா இடையிலான உறவு குறித்த கேள்விக்கு புதின் அளித்த பதில் வருமாறு:
இந்தியாவின் நலன், இந்திய மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி பணிய வைக்க முடியாது. அவர் யாருக்கும் அஞ்ச மாட்டார். மோடியை அச்சுறுத்த முடியும் என்பதை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. உண்மையை சொல்வதென்றால் இந்தியாவின் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் கடினமான முடிவுகளைபார்த்து வியப்பில் ஆழ்கிறேன்.
ரஷ்யா, இந்தியா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. பிரதமர் மோடி கடைபிடிக்கும் உறுதியான கொள்கைகளே இரு நாடுகளின் வலுவான உறவுக்கு முக்கிய காரணம்.
இவ்வாறு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் புதின் எற்கெனவே பலமுறை பாராட்டியுள்ளார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டில் அதிபர் புதின் பேசும்போது, “இந்தியா, ரஷ்யா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கின்றன. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சுதந்திரமாக செயல்படுகிறது. அந்த நாடு யாருடைய ஆதிக்கத்தையும் ஏற்காது என்று தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 4-ம் தேதி மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் புதின் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி புத்திசாலி. அவரது தலைமையில் இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பாராட்டினார்.
கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மாஸ்கோவில் நடந்த கூட்டத்தில் அதிபர் புதின் பேசும்போது, “பிரதமர் மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் அந்த நாட்டில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவை பின்பற்றி ரஷ்யாவிலும் உள்நாட்டில் அதிக கார்களை தயாரிக்க வேண்டும். என்று தெரிவித்தார். இதுபோல் பல சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடியை புதின் பாராட்டி உள்ளார்.