புதுடெல்லி: நாட்டை முன்னேற்ற மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று, உத்தராகண்டில் நடந்த உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தை முக்கியமுதலீட்டு கேந்திரமாக மாற்றும் நோக்கத்துடன் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைநகர் டேராடூனில் உள்ள மத்திய வன ஆய்வு மையத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 5,000 முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்றுள்ளார்.
இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
உத்தராகண்டில் சிறந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே கட்டமைப்பு விரிவாக்கப்படுகிறது. இந்த மேம்பாட்டு பணிகள் மூலம் தொழில் துறையினரை ஈர்க்கும் மாநிலமாக உத்தராகண்ட் உருவெடுத்து வருகிறது. உத்தராகண்டில் சுற்றுலா, ஆன்மிகம், விவசாயம், சுற்றுச்சூழல் எனபலவகையான வளங்கள் உள்ளன. இங்கு உள்ள மக்கள் கடும் உழைப்பாளிகள்.
தானா சேட் எனும் பெரும்செல்வந்தர்களின் குடும்ப திருமணங்கள் வெளிநாடுகளில் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்த திருமணங்களில் மிக அதிக தொகையை செலவிடுவதாக அவர்கள் பெருமைப்படுவதும் உண்டு.இவர்கள் இங்கு முதலீடு செய்கிறார்களோ, இல்லையோ, தங்கள் வீட்டு திருமணங்களையாவது இங்கு நடத்த வேண்டும். இதுபோன்ற திருமணங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு டேராடூனில் நடத்த முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், சுமார் 50 ஆயிரம் திருமணங்கள் நடந்துஉத்தராகண்ட், பெரும் தொழில் களமாகும். அது தொடர்பான தொழில்கள், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த மாநாடு மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் உத்தராகண்ட் முக்கிய தொழில் மாநிலமாக மாறும்.
இமயமலையை தன்னிடம் கொண்டிருக்கும் உத்தராகண்ட் என்பது புனிதபூமி. இங்கு நடந்தாலே உடலுக்கு சக்திகிடைக்கும். இங்கு வந்தபிறகு உத்தராகண்டால் ஆசீர்வதிக்கப்பட்டதுபோல உணர்கிறேன்.
இங்கு விளையும் உணவுப் பொருட்களை ‘ஹவுஸ் ஆஃப் இமாலயாஸ்’ என்ற பெயரில் உத்தராகண்ட் அரசு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தானியங்களை விளைவிக்கும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2 கோடி சேர வேண்டும் என நாங்கள் உறுதி எடுத்துள்ளோம்.
நம் நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைக்கப்பட வேண்டும். இதற்காக, உள்ளூர் உற்பத்தி பொருட்களை ஊக்குவித்து, அவற்றை முத்திரை பொருட்களாக மாற்றுவது அவசியம். நாட்டின் அனைத்து மாநிலங்களும் இதுபோல செய்வதன் மூலம் வெளிநாடுகளை நம்பியிருப்பது குறையும்.
இதுபோன்ற செயல்பாடுகளால் இந்தியாவின் பொருளாதாரம் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த உயர்வால் நம் நாடு சர்வதேச பொருளாதாரத்தில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் 3-வது பெரிய நாடாக உயரும்.
நாட்டை முன்னேற்ற மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். தொழில் திறனை வளர்ப்பதும், தொழில் நடத்துவதற்கு ஏற்ற எளிதான சூழலைமுதலீட்டாளர்களுக்கு உருவாக்குவதுமே மத்திய அரசின் கொள்கை.
இந்திய மக்கள் நிலையான அரசையே விரும்புகின்றனர். சமீபத்திய சட்டப்பேரவை தேர்தல்களில் அதை மீண்டும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மத்தியில் அடுத்த முறையும் இந்த ஆட்சியே தொடரும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
உத்தராகண்ட் ஆளுநரான லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) குர்மீத்சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் சுவாமி பாபாராம்தேவ் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு தொழிலதிபர்களும் உரையாற்றினர்.
பாபா ராம்தேவ் பேசும்போது, தங்களது பதஞ்சலி நிறுவனம் சார்பில் உத்தராகண்டில் மேலும் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார். இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி 2-வது முறையாக பதவி வகிக்கிறார். இவர் பதவியேற்றது முதல், மாநிலத்தில் பல்வேறு தொழில்களை தொடங்குவதில் முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை அவர் நடத்தி உள்ளார். அதன்மூலம் இதுவரை ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு முதல்வர் தாமி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கும் மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.