மூன்று தலைமுறையைக் கடந்த கணேசனின் (ஈ.வி.கணேஷ்பாபு) பாரம்பரிய வீட்டை விற்க முடிவு செய்கிறார்கள் அவனது உடன் பிறப்புகள். அதற்கு மனமில்லாமல் அவர் ஒப்புக் கொண்டாலும் வீட்டில் இருக்கும் பர்மா தேக்கு கட்டிலின் மீதுள்ள பிணைப்பின் காரணமாக அதை மட்டும் விற்க அனுமதிக்கவில்லை. இதனால் கட்டில் வைக்கும் அளவிற்கு ஒரு புதிய வீட்டைத் தேடி அலைகிறார் கணேசன். அவருக்குப் புதிய வீடு கிடைத்ததா, அந்தப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதே `கட்டில்’ படத்தின் கதை.
தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை கதாபாத்திரங்களையும் ஒரே நபராக ஏற்று நடித்துள்ளார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஈ.வி.கணேஷ்பாபு. வித்தியாசமான ஆடைகளைத் தவிர்த்து அவரிடம் நடிப்பில் எந்தவித மாறுதலும் இல்லை. அனைத்து உணர்வுகளிலும் செயற்கைத்தனமும் தடுமாற்றமும் எட்டிப்பார்க்கின்றன. படம் முழுக்க கர்ப்பிணிப் பெண்ணாக வலம் வருகிறார் நாயகி சிருஷ்டி டாங்கே. சில இடங்களில் நடிப்பில் நியாயம் சேர்க்க முயற்சி செய்கிறார். கணேசனின் தாயாக நடித்திருக்கும் கீதா கைலாசம் தனது வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். கூடவே நட்புக்காக விதார்த், எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் வந்து போகிறார்கள்.
பாரம்பரிய கட்டில்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பது போல தொழில்நுட்பத்தை கையாண்ட விதத்திலும் பழைமை மாறாத பயணத்தைத் தொடர்ந்துள்ளனர் படக்குழுவினர். ‘வைட் ஆங்கிள்’ ரவி சங்கரன் ஒளிப்பதிவு சின்னத்திரைக்கே உரிய ஒளியுணர்வையும், தரத்தினையும் கொண்டுள்ளது. சில இடங்களில் சீரில்லாமல் அசையும் கேமரா கோணங்கள் உறுத்தல். அதே போலப் படத்தினைக் கோர்த்த விதத்திலும் ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு நகரும் டிரான்சிஷனில் வழக்கொழிந்த பழைய எபெக்ட்ஸ்களையே பயன்படுத்தி இருக்கிறார் படத்தொகுப்பாளர் பி.லெனின். அவரே படத்துக்கான ஸ்க்ரிப்ட்டையும் எழுதியுள்ளார். உணர்வுகளைத் தூண்டும் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை உயிரோட்டம் இல்லாத காட்சிகளால் துண்டாகத் தெரிகிறது.
‘கட்டில்’ என்கிற ஒரு அஃறிணை பொருள் மீது நாம் உணர்வு கொள்ள வேண்டுமென்றால், அதற்கும் அதன் உடைமையாளருக்கும் இருக்கும் பிணைப்பு என்ன என்பதைக் காட்சிகள் வழி கடத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து வசனங்களாகவே அது சொல்லப்பட்டிருப்பது பெரும் பின்னடைவு. இந்தப் பலவீனங்களுக்கு நாடகத்தன்மையான திரைக்கதையும் செயற்கைத்தனமான நடிப்புமே முக்கிய காரணங்கள்.
யதார்த்தமாகச் சொல்லப்பட வேண்டிய கதையில், அதீத நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள் நிரப்பப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு 75 லட்சம் பணம் கிடைத்தும் தொழிற்சாலையில் கூலி உயர்வு கேட்கும் தொழிலாளியாக இருப்பதெல்லாம் சுய தண்டனையா, அல்லது குடும்பத்தையும் சேர்த்துத் தண்டிக்கும் முயற்சியா… அல்லது பார்வையாளர்களையும் சோதிக்கும் முயற்சியா என்பது விளங்கவில்லை.
களமும் காலமும் மற்றொரு குழப்பமாகவே தொடர்கின்றன. படத்தின் ஆக்கத்திலேயே இத்தனை போராட்டம் என்றால் மற்றொருபுறம் கருத்து கூறுகிறேன் என்று வெளிமாநில தொழிலாளர் ஆதரவு, எதிர்ப்பு போன்ற வசனங்களும் சம்பந்தமே இல்லாமல் வந்து போகின்றன. கூடுதல் ஒவ்வாமையாகக் குடிசை பகுதிகளில் இருக்கும் நபர்களை அருவருப்பாகச் சித்திரிக்கிறார் இயக்குநர். இதற்குப் பிரதிபலனாக அதே குடிசை பகுதியில் இருக்கும் ஒருவர் குழந்தைக்குப் பால் கொடுத்து உதவியதாகக் கட்சியும் வைத்துச் சமாளிக்கும் முயற்சியும் இடம்பெற்றிருக்கிறது. அஃறிணையின் மீதுள்ள அக்கறை எல்லாம் அனைத்து மனிதர்கள் மீதும் இருந்திருக்கலாம்.
உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறுகதை இது. ஆனால் மோசமான திரை ஆக்கத்தினால் ‘கட்டில்’ எனும் இந்த பர்னிச்சரை (படத்தினை) சல்லி சல்லியாக நொறுக்கியிருக்கிறார்கள்.