ஆவினும் சர்ச்சையும் பிரிக்கமுடியாததாகிவிட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து ஆவினில் விலை உயர்வு, பால் மற்றும் பால் உபபொருள்களின் தட்டுப்பாடு என பல்வேறு குளறுபடிகள் தலைவிரித்தாடுகிறது. என்ன செய்வதென தெரியாமல் அமைச்சரும், அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இதற்கிடையில்தான் மிக்ஜாம் புயலால் சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிக்கரணை, தாம்பரம், சோழிங்கநல்லூர், வடசென்னை பகுதிகளில் இன்னும் இயல்புநிலை முழுவதுமாக திரும்பவில்லை. அங்கிருக்கும் மக்கள் உணவு, மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
ஆவின் பாலை வைத்து நாள்களை நகர்த்திவிடலாம் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சம்மந்தப்பட்ட பகுதிகள் மட்டும் அல்லாது சென்னையில் பல இடங்களில் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக சொல்லப்பட்டது. கிடைக்கும் இடங்களிலும் கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஆனால் அமைச்சர் மனோ தங்கராஜ், ‘தட்டுப்பாடு இல்லை’ என கூறி வருகிறார். இதற்கிடையில் ஆவின் நிறுவனம், கர்நாடக அரசின் `நந்தினி பால்’ நிறுவனத்திடம் இருந்து பால் கொள்முதல் செய்ததாகவும், அதில் எப்எஸ்எஸ்ஐ-யின் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் தகவல்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆவின் வைத்தியநாதன், “ஆவின் பால் கொள்முதல் பாதிக்கும் கீழ் குறைந்துவிட்டது. எடப்பாடி ஆட்சியில் தினம்தோறும் 44 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பணம் கொடுக்காததாலும், நிர்வாக குளறுபடி காரணமாக, அவர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கி சென்றுவிட்டார்கள். இதனால் தற்போது 24 லட்சம் லிட்டராக குறைந்துவிட்டது. எனவேதான் மழை நீர் வடிந்த பிறகும் பால் விநியோகிக்க முடியாமல் ஆவின் தவித்து வருகிறது. போதுமான அளவுக்கு பால் இல்லாதால், கர்நாடக அரசுக்கு சொந்தமான நந்தினி நிறுவனத்திடம் இருந்து 2.25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்திருக்கிறார்கள். பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மட்டும் சென்னையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அவற்றை பெங்களூருவுக்கு கொண்டு சென்று பாலை நிரப்பியிருக்கிறார்கள். தண்ணியை தர மறுக்கும் கர்நாடக பாலை கொடுத்திருக்கிறது. ஆனால் அதில் எப்எஸ்எஸ்ஐ-யின் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறது. அதாவது பால் எங்கு யாரால் உற்பத்தி செய்யப்பட்டது என்ற விவரம் பாக்கெட்டில் இருக்க வேண்டும். ஆனால் இதில் இல்லை. சேலத்தில் அதிக அளவு பால் உற்பத்தி இருக்கிறது. எனவே அங்கிருந்து லாரியில் சென்னைக்கு கொண்டுவந்திருக்கலாம். நந்தினி நிறுவனமே மதுராந்தகத்தில்தான் பேக் செய்கிறது. எனவே ஆவின் அதிகாரிகள் கொடுக்கும் தவறான தகவலை அமைச்சர் நம்பக்கூடாது” என்றார் கொதிப்புடன்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ்-ஐ தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் அவர்கள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில், அதனை உரிய பரிசீலனைக்கு பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.